Type Here to Get Search Results !

வால்பாறையில் மரத்தில் சிக்கி காயமடைந்த கரடிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வனத்துக்குள் விடப்பட்டது

கோவை, ஆகஸ்ட் 24.,

வால்பாறையில் தேன் குடிக்க சென்ற கரடி, மரத்தின் கிளையில் கால் மாட்டிக் கொண்டதால் சிக்கித் தவித்த கரடியை பத்திரமாக வனத்துறையினர் மீட்டனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே வாட்டர்ஃபால் எஸ்டேட் தேயிலை தோட்டத்தில், 23-08-2021 நேற்று காலை 7 மணியளவில் கரடி ஒன்று மரத்தின் மீது ஏறி நின்று சத்தம் போடுவதை அந்த பகுதி மக்கள் பார்த்துள்ளனர். 
பல மணிநேரமாக கரடி மரத்தில் இருப்பதை பார்த்த பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று பார்த்தபோது மரத்தின் கிளையில் கரடியின் கால் மாட்டிக்கொண்டு தவிப்பதை அறிந்தனர்.
மேலும், தேயிலை தோட்டத்தில் கரடி மாட்டிக்கொண்ட மரத்தின் கீழே 2 கரடிகள் சுற்றி வந்ததால் மரத்தின் அருகே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. 
இதையடுத்து, 23-08-2021 நேற்று மாலை வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் முனியாண்டி, மணிகண்டன், சக்திவேல் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர், கரடியை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 
இதற்காக வனத்துறையினர் கயிறு கட்டி, மரத்தை அடியோடு வெட்டி சாய்த்ததைத் தொடர்ந்து கரடிக்கு வனத்துறை மருத்துவர் சுகுமார் மயக்க மருந்து செலுத்தி கரடியை மீட்டு பரிசோதனை செய்தனர்.
அப்போது, கரடியின் இடது காலில் காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே வனத்துறையினர், கரடியை ரொட்டிக்கடை மனித-விலங்கு மோதல் தடுப்பு மற்றும் வன விலங்குகளின் சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை முடிந்த நிலையில்  24-8-2021 இன்று ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் என்.ஜி.கணேசன் உத்தரவுபடி, அட்டகட்டி பயிற்சி மையம் உதவி வனப்பாதுகாவலர் வே.செல்வம், வால்பாறை வனச்சரக அலுவலர் கி.ஜெயச்சந்திரன், பண கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமாறன், உதவி கால்நடை மருத்துவர் மெய்யரசன், NCF தன்னார்வு தொண்டு அலுவலர் கணேஷ்ராம் மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலையில் பிடிபட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட கரடியினை ஆண்டிபாரா சோலை என்ற அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies