Type Here to Get Search Results !

ரூ. 425.40 தினக்கூலி தமிழக அரசு நிர்ணயம்: தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு நன்றி

தேயிலை தோட்ட உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், ரூபாய் 425,40 காசுகள் தினக்கூலியை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


வால்பாறையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 425 ரூபாய் 40 பைசா சம்பளத்தை உயர்த்திய தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.


தமிழக தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான நான்காம் கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை, கோவையில் ஏ.டி.டி., காலனியில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது. 


இந்த கூட்டத்தில், தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்கத்தின் பேச்சுவார்த்தை குழு தலைவர் பாலச்சந்தர், செயலாளர் பிரதீப் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


அதேபோல், தொழிற்சங்கம் தரப்பில், தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் அமீது, எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.


ஏற்கனவே, மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால், வேதனையில் இருந்த தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் துறையினரிடம் ஊதிய உயர்வு குறித்து மனு அளித்திருந்தனர்.


இதையடுத்து, பேச்சுவார்த்தை நீடித்த நிலையில், தொழிலாளிகளுக்கு தினமும் 425 ரூபாய், 40 காசுகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறக்கப்பட்டுள்ள தகவல், தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் நிம்மதியை தந்துள்ளது. 


தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் அமீது கூறியதாவது: முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது, தினக்கூலியாக 600 ரூபாய், இரண்டாம் கட்டத்தின்போது 475, மூன்றாம் கட்டத்தின்போது 430 ரூபாய் வழங்க கோரினோம். மூன்று பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.


சென்னை தொழிலாளர் துறையினரிடம் முறையிட்டோம். இதையடுத்து, அதன் அடிப்படையில் தமிழக அரசு 425 ரூபாய், 40 காசுகள் என நிர்ணயித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 



அரியர் விசயத்தில் தேயிலை தோட்ட நிறுவனத்தினர் மறுப்பு தெரிவிக்கின்றனர். இருப்பினும், அதை பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 


கேரள தொழிலாளர்களை விட, 15 ரூபாய், 41 காசுகள் தினக்கூலி இங்கு அதிகம். இதன் வாயிலாக வால்பாறை, நீலகிரி, ஏற்காடு, மாஞ்சோலை பகுதிகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவர்கள். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


இந்திரா தேசிய தோட்ட பொது தொழிலாளர் சங்கம் பொதுச்செயலாளர் k.அருணாகிரி பாண்டி  கூறியதாவது:- வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த காலங்களில் ஊதிய உயர்வு கேட்டு பல்வேறு போராட்டங்களுக்குப் பின் தோட்டத் தொழிலாளர்களுக்கு  ரூ.343.27 தினக்கூலி வழங்கப்பட்டது. 

ஆனால், அருகில் இருக்கும் கேரள மாநிலத்திலுள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.416.16 தினக்கூலியாக  வழங்கப்பட்டது. அதாவது, கேரள தேயிலை தோட்ட தொழிலாளர்களைவிட, வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.72 குறைவாக வழங்கப்பட்டது. எனவே, கேரள தேயிலைத் தொழிலாளர்களுக்கு இணையான சம்பளத்தை வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்கக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. 


அதிமுக பத்தாண்டுக்காலம் ஆட்சி செய்தபோதும் எந்த வழியும் எட்டப்படாத நிலையில், தற்போதைய திமுக அரசு பொறுப்பேற்று நூறு நாட்களை கடந்த நிலையில், தமிழக அரசு 425 ரூபாய், 40 காசுகள் என நிர்ணயித்து, அரசாணை வெளியிட்டிருப்பது தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மனது நிறைய மகிழ்ச்சியை அள்ளிக் கொடுத்திருக்கிறது. தமிழக முதல்வருக்கு இந்திரா தேசிய தோட்ட பொது தொழிலாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.  


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies