Type Here to Get Search Results !

பிஏபி திட்ட பாசன கால்வாய்களை தூர்வார அரசு நிதி வழங்கவில்லை - மாவட்ட விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி, ஆகஸ்ட். 01- 

பிஏபி திட்டத்தில் உள்ள பாசன கால்வாய்களை தூர்வார அரசு நிதி வழங்கவில்லை என மூன்று மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து 50 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணையில் இருந்து 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருமூர்த்தி அணையிலிருந்து மூன்றாம் மண்டலததிற்கு வழங்கப்பட்ட தண்ணீர் கடந்த மே மாதம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. தற்போது திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.



சமீபத்தில் பிஏபி மூன்று மாவட்ட விவசாய பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜூலை 3 ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

 பிஏபி திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது. ஆதலால் கால்வாய்கள் புதர் மண்டி மற்றும் குப்பைகளாக காட்சியளிக்கிறது.



இதனால், தண்ணீர் திறந்தாலும் கடைமடை வரை தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. இதையடுத்து, கால்வாய்களை தூர்வார விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.


கோரிக்கையை அடுத்து அரசு தரப்பில் பிஏபி அதிகாரிகளிடம் தூர்வார தேவையான நிதி அளவு எவ்வளவு என்பது பற்றி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு அதிகாரிகள் தரப்பில் சுமார் ரூ. 7 கோடி ரூபாய் தேவைப்படும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பிஏபி திட்டத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்று நிதித்துறை மறுத்துவிட்டதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் தண்ணீரையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கால்வாய்களை தூர்வார கோரிக்கை வைத்து திருமூர்த்தி அணையில் உள்ள 134 பாசன சபை தலைவர்களும், ஆழியாரில் உள்ள 16 பாசன சபை தலைவர்களும் தனித்தனியாக கோரிக்கை மனுவும் அரசுக்கு அனுப்பி இருந்தனர் .



 திருமூர்த்தி அணையிலிருந்து நான்காவது மண்டல மற்றும் முதலாவது மண்டலத்தில் பயன்பெறும் இரண்டு லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் கால்வாய்களையும், ஆழியாறு அணையிலிருந்து பாசன வசதி பெறும் கால்வாய்களையும் தூர்வார கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் நிதி கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


பொள்ளாச்சி எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறுகையில், கடந்த காலங்களில் குடிமராமத்து திட்டத்தில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டது. தற்போது தண்ணீர் திறப்பிற்கு முன்பு கால்வாய்கள் தூர்வாரப்பட்டிருக்கவேண்டும். ஆனால், தூர்வாராமல் இருப்பது விவசாயிகள் மீது அரசு மெத்தனபோக்குடன் செயல்படுவதை காட்டுகிறது என்றார்.


 இதுகுறித்து பிஏபி திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவமிடம் கேட்டபோது, பிஏபி திட்டத்தில் நான்காவது மண்டலத்தில் ஒரு இலட்சம் ஏக்கரும், அடுத்த படியாக முதலாவது மண்டலத்தில் ஒரு லட்சம் ஏக்கரும் பயன்பெறும். பாசன கால்வாய்கள் தூர் வாரப்படாமல் புதர் மண்டி உள்ளது. தண்ணீர் திறந்தாலும் கடைமடை வரை தண்ணீர் செல்லாது. ஆகவே விவசாயிகள் தரப்பில் செய்தித்துறை அமைச்சர்,நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கால்வாய்களை தூர்வார வேண்டி கோரிக்கை வைத்திருந்தோம். 


இதையடுத்து, நீர்வளத்துறை அமைச்சகம் சார்பாக பொதுப்பணித் துறையிடம் கால்வாய்களை தூர்வார நிதி எவ்வளவு தேவைப்படும் என்று கேட்டிருந்தனர். இவர்களும் ரூ. 7 கோடி நிதி தேவை என பதில் அளித்திருந்தனர். இந்நிலையில் நிதித்துறை நிதி வழங்க மறுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து மீண்டும் நீர்வளத் துறை அமைச்சரின் தனி உதவியாளர், செய்தித்துறை அமைச்சர் ஆகியோரிடம் பேசியுள்ளோம். நிதி மறுக்கப்பட்டுள்ள தகவல் வேதனை அளிக்கிறது என்றார்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies