தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் திருஉருவப்படம் திறப்பு விழா, சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா சென்னை தலைமை செயலகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தற்போது நடைபெற்று வருகிறது. நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்..
மேலும் நிகச்சியில், கி.வீரமணி, வைகோ, தொல்.திருமாவளவன், கே.எஸ்.அழகிரி, கோபாலகிருஷ்ணன், முத்தரசன் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். துவக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு வரவேற்புரை ஆற்றினார். தமிழக மக்களுக்காக ஏரளாமான சமூகநீதி திட்டங்களை தந்த மாபெரும் தலைவர் மு.கருணாநிதி அவர்கள். அவருடைய திருவுருவப் படத்தை திறந்து வைக்க வந்திருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை தமிழக மக்கள் சார்பில் வரவேற்கிறோம் என்று சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
இந்தநிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு நினைவுப் பரிசுகளை போர்த்தி வரவேற்றார். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் மு.கருணாநிதியின் புகைப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். கலைஞர் மு.கருணாநிதியின் அவர்களின் உருவப்படத்தின் கீழே 'காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது' என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டப்பேரவையில் 16ஆவது தலைவராக கலைஞர் மு.கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


