தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கோவில்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
ஆதலால், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி தருமபுரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்கள், தருமபுரி வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தா.அம்மாப்பேட்டை சென்னியம்மன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வர ஸ்வாமி கோவில் உள்ளிட்ட அனைத்து பிரதான கோவில்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் வரும் 3ஆம் தேதி வரை பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
மேலும், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி மற்றும் காவிரி ஆற்றங்கரையில் வழிபாடு செய்ய பொதுமக்களுக்கு தடை. மேலும், ஆகம விதிப்படி திருக்கோவில்களில் பூஜை புனஸ்காரங்கள் அர்ச்சகர்கள், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கூறியுள்ளார்.



