தான் தீவிர அரசியலில் இருந்து விலகி கொஞ்ச நாள் ஓய்வெடுத்துக்கொண்டு, மீண்டும் தனது தொழிலை முழுமூச்சாக கவனிக்க முடிவு செய்துள்ளாராம் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்.
மாஃபா என்ற மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் பாண்டியராஜன். பாஜக, தேமுதிக, அதிமுக போன்ற கட்சிகளில் அடுத்தடுத்த அரசியல் பயணங்களில் இருந்தவர் பாண்டியராஜன். இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டதால் அதிமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார்.
2021-லில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் மீண்டும் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார் பாண்டியராஜன். தனது பகுதியில் கட்சியினரின் உள்ளடி வேலைகளால் பார்த்ததால் தான் தோல்வி அடைந்ததாக கடும் அதிருப்தியில் இருந்தார் பாண்டியராஜன்.
இந்நிலையில், கடும் அதிருப்தியில் இருந்த பாண்டியராஜன் தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் விலகி, மீண்டும் தனது தொழிலை விரிவுபடுத்தலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
இந்தநிலையில், தான் தீவிர அரசியலுக்கு வந்ததால் மாஃபா மற்றும் சி.எல் மனிதவள நிறுவனத்தின் பொறுப்புகளை தனது மனைவி மற்றும் பிறரிடம் ஒப்படைத்திருந்தார். தற்போது மீண்டும் மாபா- சி.எல். நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார். இந்தியாவில் மட்டும் 40 இடங்களில் 56 அலுவலகங்களை கொண்டு இயங்கும் சி.எல் குழுவின் தலைவராக பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாண்டியராஜன் மேலும் கூறுகையில், ஒரு காலத்தில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இருந்தது மாஃபா நிறுவனம். தீவிர அரசியலில் ஈடுபட்டதால், தன் தொழிலை கவனிக்க முடியவில்லை. தற்போது மீண்டும் தொழிலை கவனிக்க முடிவெடுத்துள்ளேன். இதற்காக தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலில் மட்டும் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன்.
நான் முழுவதுமாக அரசியலை விட்டு விலகவில்லை. அதிமுக தனக்கு வழங்கிய கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் தொடர்கிறேன் என்று கூறினார்.
தீவிர அரசியலில் இருந்து பாண்டியராஜன் விலகி, மீண்டும் அவர் தொழில்துறைக்கு திரும்புவதை வரவேற்று பலரும் பாண்டியராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.




