அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பெண்ணை தூண்டிவிட்டு தன் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டதாக, முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் தெரிவித்துள்ளார்.

கோவை காளப்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் சிந்துஜா என்ற பெண் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், முன்னாள் வால்பாறை எம்.எல்.ஏ.,வும் திமுக பிரமுகருமான கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, இதுவரை ரூ.7 கோடி ரூபாய் பணம் பறித்ததாகவும், அதை கேட்டதால், கோவை தங்கம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி இருந்தார். இதுதொடர்பாக அருண் பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் மீது, கோவை கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, கோவை தங்கம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், புகார் அளித்த சிந்துஜா என்பவரை நான் இதுவரை பார்த்ததே இல்லை என்றும், இதுவரை தொலைபேசியில் கூட பேசியதும் இல்லை என்றும் கூறினார். இந்த புகார் முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், காழ்ப்புணர்ச்சியுடன் அந்த பெண் புகார் அளித்துள்ளார் என்றும் குற்றம்சாட்டினார். மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அந்த பெண் சிந்துஜாவை தூண்டி விட்டவர்கள் மீது கோவை நீதிமன்றத்தில் மானநஷ்ட வழங்கு தொடர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் கூறுகையில், நான் அரசியலில் மிகவும் தூய்மையாக இருந்து வருகிறேன். அப்படி இருக்கும்போது எனது பெயரை அந்த பெண் சிந்துஜா குறிப்பிட்டது மிகுந்த வேதனையை அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தன் மீது அந்த பெண் சிந்துஜா புகார் அளித்த உடனேயே, இதுகுறித்து கோவை காவல் ஆணையர், துணை ஆணையரிடமும் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், எனது மருமகனுக்கும் சிந்துஜா என்ற அந்த பெண்ணும் இணைந்து தொழில் செய்துள்ளனர் என்றும், அதற்கு இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த நிலையில், பணம் கொடுக்கல் – வாங்கலில் பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளதாகவும், கோவை தங்கம் தெரிவித்தார்.
மேலும், இந்த பிரச்சனைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். இந்த விவகாரத்தில், யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய அவர், எனது மருமகன் இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பார் என்றும் கூறினார்.



