இன்று உலக புலிகள் தினம்.
அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் ஜூலை 29-ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் உலக புலிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
கம்பீரமாக சுற்றித்திரியும் புலிகள்தான் பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் வனங்களின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளுடைய எச்சங்கள்தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன.
இதனாலே புலிகள் கொடிக்கப்பல் உயிரினம் என அழைக்கப்படுகிறது. கடலில் பறந்து விரிந்து கப்பல் வரும்போது அந்த கப்பல் குறித்து அறிந்து கொள்ள அதன் மீது பறக்கும் கொடியே முதல் ஆதாரமாக உள்ளது.
அதேபோல் வனத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை வைத்தே அந்த வனத்தின் வளம் குறித்து தெரியும் என வன உயிரின ஆர்வலர்கள் கூறினார்.
வனத்தின் வளம் பெருக அடிப்படை ஆதாரமாக இருக்கும் இந்த புலிகளின் எண்ணிக்கை, இந்தியாவில் 2000வது ஆண்டில் 1700ஆக கடுமையாக சரிந்து இருந்தது. இதையடுத்து மத்திய-மாநில அரசுகள் சுதாரித்து கொண்டு, புலிகளை காத்து அதன் எண்ணிக்கையை பெருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தன.
அதன் விளைவாகதான் தற்போது இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,226ஆக உயர்ந்ததுள்ளது. இது உலக அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் ஆகும்.
வனத்தைக் காக்க அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மூலம் புலிகளின் எண்ணிக்கை தற்போது உயர்ந்த போதும், சில இடங்களில் பொதுமக்கள் புலிகளை அடித்துக் கொன்றனர் என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கத்தான் செய்கிறது.
உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளின் அழிவுக்கு வேட்டையாடுதல், வாழ்விடம் ஆக்கிரமிக்கப்படும் தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வேட்டையாடுதல் நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபடாமலும், புலிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
உலக அளவில் இந்தியாவில்தான் அதிகமான புலிகள் வாழுகின்றன. இதில், இந்தியாவில் 50 இடங்களில் புலிகள் சரணாலயம் காணப்படுகிறது. தமிழ் நாட்டில் ஆனைமலை, சத்தியமங்கலம், முதுமலை, களக்காடு, முண்டந்துறை ஆகிய இடங்களில் புலிகள் சரணாலயம் காணப்படுகிறது.
மனித இனம் வாழ தேவையான நீரும், இயற்கையான சுத்தமான காற்றும் வேண்டும். இந்த இரண்டும் கிடைக்க வேண்டுமானால் வனம் வேண்டும். வனம் அதிகமாக பெருக, புலிகள் வாழ வேண்டும். மனித இனம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வனத்தில் வாழ வேண்டும் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் புலிகள் தினத்தை கோலாகலமாக கொண்டாடுவோம்.


