தமிழ்நாடு காவல்துறையின் 30-வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. தற்போதுள்ள டி.ஜி.பி திரிபாதி ஓய்வுபெற்றதையொட்டி இன்று சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பதவியேற்றார்.
தமிழக காவல்துறையின் 30வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி ஏற்றார் சைலேந்திர பாபு.சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய டிஜிபி சைலேந்திரபாபு பதவியேற்றுக்கொண்டார்.
புதிய டிஜிபி சைலேந்திரபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார் திரிபாதி. திரிபாதியின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பி வைக்கப்பட்டது. பதவியேற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக காவல்துறையின் தலைமைப் பொறுப்பேற்றுள்ளேன். இந்த அரிய வாய்ப்பை தந்த முதல்வருக்கு நன்றி என்று கூறினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும். முதல்வரிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


