வால்பாறையை அடுத்த ராயன்மலை கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து பொதுப்பணித்துறை இடத்தில் சாலையோரமாக படர்ந்து கிடந்த புதர்களை அகற்றினார்கள்.
வால்பாறையை அடுத்த கீழ் நீராறு அணை அடுத்து உள்ளது ராயன் மலை கிராமம் இந்த கிராமத்தில் சுமார் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதி மக்கள் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு என்றால் சிங்கோனாவிற்கு வரவேண்டும்.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று பரவலை முன்னிட்டு பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராயன் மலை கிராமத்தில் இருந்து சின்கோனா சோதனை சாவடி, சின்னக்கல்லார், பெரியகல்லார் வழிதடத்தில் ஒரு சாலையும், உபாசி, கீழ் நீராறு அணை, மற்றும் ரயான் டிவிசன் ஆகிய வழி தடத்தில் ஒரு சாலை உள்ளது. சின்கோனாவிற்கு நடந்தும் சைக்கிள்களில் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வரவேண்டியதுள்ளது.
இதையடுத்து கீழ் நீரார் அணை பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலையோரங்களில் இருபுறமும் அதிக அளவில் சாலையை மூடியிருக்கிறது. இதனால் புதர்களில் யானை, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் மறைத்திருப்பதால் வாகனங்களில் செல்பவர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. சிலநேரங்களில் வனவிலங்குகள் மறைந்திருந்து இந்த வழியாக செல்பவர்களை தாக்குதலும் நடத்த நேரிடுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அந்தப் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வந்த ராயன் மலை கிராம மக்கள், அனைவரும் ஒன்றிணைந்து தாங்களாகவே அந்த புதர்களை அகற்ற முடிவு செய்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் இருந்த புதர்களை அகற்றி சுத்தம் செய்துள்ளனர்.
இந்தப் பணிகளை செய்த ராயன் மலை கிராம மக்களுக்கு வால்பாறை வட்டாட்சியர் ராஜா பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்.




