தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று ஆசிப்பெற்ற பிறகு தலைமை செயலகத்துக்கு சென்றார்.அங்கு அவருக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தின் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4,000/- வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 ரூபாய் குறைப்பு, சாதாரண கட்டண நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு கான "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற திட்டம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்பன உள்ளிட்ட திட்டங்களுக்கு கையெழுத்திட்டு அதிரடி காட்டினார். தமிழக முதலமைச்சராக பதவியேற்ற முதல்நாளே மு.க.ஸ்டாலின் மக்களுகாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள் என பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றும் பிரதமர் நரேந்திரமோடி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Congratulations to Thiru @mkstalin on being sworn-in as Tamil Nadu Chief Minister.
— Narendra Modi (@narendramodi) May 7, 2021


