தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளது. தேர்தல் பரப்புரை இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக வாக்கு சேகரித்து வருகின்றன.
தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் எல்லாம் எதிர்க் கட்சிக்கே சாதகமாக வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், தேர்தல் நேரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மனதில் கொண்டு, ஆளுங்கட்சியினர் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
இந்தநிலையில், இன்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இனியும் எத்தனை அவதாரம் எடுத்தாலும் மு.க.ஸ்டாலினால் வெல்லமுடியாது. முதல்வர் கனவு பலிக்காது. 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் எனக்கூறி ஒரு மாயையில் இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதிமுக தலைமையில் அமைத்திருப்பது வலிமையான வெற்றிக் கூட்டணி. இந்தத் தேர்தலிலும் அதிமுக கூட்டணிதான் வெல்லும் என்று அதிரடியாக பேசினார்.
மேலும், திமுக குடும்ப அரசியல் செய்வதுபோல அதிமுக செய்யவில்லை. யாரிடம் டூப் அடித்து வருகிறீர்கள். இது விஞ்ஞான உலகம். நாட்டுக்கு என்ன செய்தார்கள் என திமுகவிடம் கேட்டால் அவர்களால் சொல்ல முடியாது. திமுகவுக்கு அதிமுகவையும் பிரதமரையும் குறை மட்டுமே தெரியும் என திமுகவை கடுமையாக விமர்சித்தார்.


