தமிழகத்தில் தொடர் வறட்சியின்போது விவசாயிகளுக்கு வறட்சி நிதி வழங்கிய ஒரே அரசு அதிமுக தான் எனக் கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் வாக்கு சேகரித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோவை கொடிசியா மைதானத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி அடையும் என கனவு காண்பதாக கூறினார். அதிமுகவின் வலிமையை கோவை மாவட்டத்தில் இன்றைய பிரச்சாரக்கூட்டமே நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.
இனியும் எத்தனை அவதாரம் எடுத்தாலும் மு.க.ஸ்டாலினால் வெற்றி பெற முடியாது. தமிழகம் வளர்ச்சியை பெற இந்த கூட்டணியை உருவாக்கப்பட்டுள்ளது. கோவையில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
தமிழகத்தில் அதிமுக எதுவும் செய்யவில்லை என்று உண்மைக்கு மாறான தகவல்களை மு.க.ஸ்டாலின் சொல்கின்றார். கோவையில் மட்டுமே ஏராளமான திட்டங்களை, அம்மாவின் அரசு செய்து இருக்கின்றது. உங்களைப்போல் குடும்ப அரசியல் செய்கின்ற கட்சி அல்ல அதிமுக. நாட்டு மக்களுக்காக இருக்கும் கட்சி அதிமுக என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ள பணிகளையும் வரிசைபடுத்தினார்.
கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வர 6,700 கோடியில் திட்டம் தயாராகி வருகின்றது. இங்கே விமான நிலைய விரிவாக்கம், கோவை மேற்கு புறவழிச்சாலை கொண்டு வரப்படுகின்றது. பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் நகரம் கோவை மாநகரம் என கூறினார்.
மேலும், நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக. நீட் தேர்வை எதிர்த்து கொண்டு இருக்கின்றோம். கோவையில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். கிரிக்கெட் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். அதேபோல் ராணுவத் தளவாட உதிரிபாக தொழிற்சாலை உருவாக்கப்படும். இதன் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படும். மு.க.ஸ்டாலின் ஊர் முழுவதும் சுற்றி, அதிமுக எந்த பணியும் செய்யவில்லை என்ற பச்சையாக பொய் சொல்லி வருகின்றார்.
அதுபோல் 13 முன்னாள் திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு போட்டு அது நடந்து வருகின்றது. 5 ஆண்டுகாலமாக வாய்தா வாங்கி கொண்டு இருக்கின்றனர். மு.க.ஸ்டாலின் கவர்னரிடம் ஒரு புகார் பட்டியலை கொடுத்து இருக்கின்றார். அந்த புகாரில் நான் 600 கோடி ஊழல் செய்து இருப்பதாக சொல்கின்றார். அந்த டெண்டர் ரத்து செய்து 2 ஆண்டுகள் ஆகின்றது. குறைகளை செல்லும்போது ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
இதே கொடிசியா மைதானத்தில் ஊழல் குற்றசாட்டுகள் பற்றி மேடை போட்டு விவாதிக்கலாம். இதற்கு மக்கள் நீதிபதியாக இருந்து நீதி வழங்கட்டும். எங்களுக்கு மடியிலே கனமில்லை. நீங்க யாருகிட்ட டூப் அடிச்சிகிட்டு இருக்கின்றீர்கள். இதெல்லாம் மக்களிடத்தில் எடுபடாது.
இதுவரை திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஏன் நீதிமன்றத்தில் வாதாடி ஜெயிக்காமல் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் மெகா ஊழல் செய்த கட்சி திமுக, தமிழ்நாட்டில் ஊழலுக்காக செய்ததற்காக கலைக்கப்பட்ட ஓரே கட்சி திமுக. இஸ்லாமிய மக்களுக்கு நிறைய திட்டங்களை இந்த அரசு செய்து வருகின்றது. இஸ்லாமிய மக்களை குழப்பி வாக்குகளை பெற முயல்கின்றனர். அதற்கு பலியாகிவிடாதீர்கள். அனைத்து தரப்பு மக்களின், உணர்வுகளை பிரதிபலிக்கும அரசாக அதிமுக அரசு இருக்கின்றது.
அதுபோல சிறுபான்மை மக்கள் அச்சமின்றி மகிழ்ச்சியோடு வாழலாம். தமிழகத்தில் 40 ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. அதில், 33 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. மீதமுள்ள 7,000 கோவில்கள் சீர்செய்து புனரமைக்கப்படும். பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் அதிமுக கூட்டணி வெற்றி பெறவேண்டும்.
தமிழகத்திலேயே மிக நீளமான மேம்பாலம் இங்கு தான் உள்ளது. அதேபோல் நம் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அதிமுக அரசுதான் நிறைவேற்றியுள்ளது. 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்து நாங்களே திறந்து வைப்போம்.
பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த நகரமாக கோவை விளங்குகிறது. கோவை மாநகரத்தில் இதுவரை 20,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 68 அம்மா கிளினிக்குகள் இங்கு உருவாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுகவிற்கு இந்த தேர்தல் இறுதி தேர்தலாக இருக்க வேண்டும். திண்டுக்கல் லியோனி, தயாநிதி மாறன் ஆகியோர் பெண்களை கொச்சைபடுத்தி பேசுகின்றனர். அவர்களை அவர்கள் கட்சி தலைமை கண்டிப்பதில்லை. விஸ்வகர்ம சமுதாயம் சில கோரிக்கைகள் வைத்து இருக்கின்றனர். அந்த கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார களத்தில் பேசியுள்ளார்.





