பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் பரவல் தற்போது இரண்டாம் அலையில் இருக்கிறது. கடந்த ஒரு மாதங்களில் பரவல் பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில், தற்போது, மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர முகக்கவசம் அனியாவிட்டால் சிறை, இ-பாஸ் கட்டாயம், முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட அதிரடியான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் எடுத்துள்ளார்கள். குறிப்பாக, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளிகளில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. முதலில் 20 மாணவிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மேலும், 36 மாணவிகளுக்கும் அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அந்தப் பள்ளியில் இருக்கும் மாணவிகள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க, அந்தப் பகுதிகளில் சிறப்பு முகாம் அமைத்து, சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. பள்ளிகளில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதை, அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.



