அமமுக-தேமுதிக மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
அதிமுகவுடன் தொகுதி பங்கீடில் ஏற்பட்ட பிரச்னையால், கூட்டணியை விட்டு வெளியேறிய தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடந்து வந்தது. அதை டிடிவி.தினகரனும் உறுதிசெய்தார். அதிமுகவில்லிருந்து தேமுதிக விலகியதும், மக்கள் நீதி மய்யம் தங்கள் கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவிற்கு அழைப்பு விடுத்தது. ஆனால், அதை தேமுதிக ஏற்கவோ மறுக்கவோ செய்யாமல், கண்டுகொள்ளாமல் இருந்தது. தேமுதிகவின் ஒட்டுமொத்த கவனமும் டிடிவி.தினகரன் பக்கமே இருந்தது.
இந்தநிலையில், திடிரென்று அமமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக் கொண்டதாகவும், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியானது. அத்தோடு இல்லாமல், தேமுதிக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், வேட்பாளர் பட்டியலை தயார் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, தனித்து போட்டியிட விரும்பாத தேமுதிகவினர், கட்சியின் தலைமைக்கு தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினார்களாம்.
இதையடுத்து, மீண்டும் அமமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதாக பரபரப்பாக தகவல்கள் கசிந்தன. அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கிறதா? என்பது விரைவில் தெரிய வருமென டிடிவி.தினகரன் கூட தெரிவித்திருந்தார். இந்தநிலையில், தேமுதிகவிற்கு 50 முதல் 55 இடங்கள் வரை ஒதுக்க அமமுக முன்வந்ததாக தகவல்கள் வெளியாகிறது.
இதையடுத்து, தேமுதிக சார்பில் அளித்துள்ள தங்கள் விருப்பத் தொகுதிகளில், 35 தொகுதிகளை அமமுக கொடுக்க ஏற்றுக் கொண்டதாகவும், பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததால், கூட்டணி இறுதியாக வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் முணுமுணுப்புகள் தெரிவிக்கின்றன.




