இந்திய நதிகள் இணைப்பு இயக்கம் சார்பில் நதிகளை தேசியமயமாக்கவும், தேசிய நதிகளை இணைக்கவேண்டும் மற்றும் தேசிய நீர் வழிச்சாலை அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருசக்கர வாகன பயணமாக தமிழகம் கேரளா ஆந்திர மாநிலங்கள் வழியாகசென்று டெல்லியில் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கிய இந்த இருசக்கர வாகன பயணம், தருமபுரி மாவட்டத்திற்கு வந்தடைந்தது.
எதற்காக இந்த பயணம்
வனத்தைக் காக்கவேண்டிய நிலையில் இருக்கும் சூழலில் , காடுகள் அழிக்கப்பட்டதால் தென்னிஇந்தியா பாலைவனமாய் மாறிவருகிறது. பருவமழையும் பொய்த்துப் போனது, தமிழ்நாட்டில் வறட்சியும், வெள்ளமும் மாறி மாறி துன்பத்திற்கு உள்ளாக்குகிறது. இதனால், ஏற்படும் இழப்பு என்பது, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. ஏரிகள், குளங்கள், ஆறுகள் எல்லாம் கழிவுநீர் தேங்கும் இடமாக மாறிபோனது. இதனால், சுற்றுச்சூழல் சீர்கெட்டு நிலத்தடி நீர், ஆயிரம் அடிக்குக் கீழே சென்று விட்டது. தமிழகத்திலுள்ள ஆறுகள் வறண்டு போனதால் தண்ணீர் பங்கீட்டு மாநிலங்களிடையே பிரிவுனைகள் வளர்ந்து வருவதோடு தேசிய ஒற்றுமையை சீர்கெட்டுப் போனது.
மேலும், இந்தப் பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே நிரந்தரத் தீர்வு என்பது, தேசிய நதிகளை இணைத்து நீர்வழிச்சாலை அமைப்பதே. அதனடிப்படையில், இந்திய நதிகள் இணைப்பு இயக்கம் சார்பில், தேசிய நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 15 ஆயிரம் கிலோமீட்டர் 150 நாட்களில் இருசக்கர வாகனத்தில் பயணமாக சென்றனர்.
மேலும், இறுதியாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவை அளிக்க உள்ளனர். இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவங்கிய இந்த வாகனப் பேரணி காவேரிப்பட்டினம், பாலக்கோடு வழியாக தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணியசிவா மணிமண்டபம் அருகே வந்தடைந்தனர். இவர்களை தொண்டு நிறுவனத்தினர்கள் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் வரவேற்றனர்.



