முதல்வர் பழனிசாமி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். எடப்பாடி தொகுதியில் 7வது முறையாக போட்டியிடும் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் போட்டியிடுகிறார்.
வேட்புமனு தாக்கல் செய்தபிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது; அதிமுக.,வின் தேர்தல் அறிக்கை மக்களை மகிழ்ச்சியடைய செய்யும் அறிக்கை. எங்கள் வாக்குறுதிகள் மக்களிடம் எடுபட்டதா என்பது தேர்தல் முடிவில் தெரியும். மக்களின் கோரிக்கைகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டேன். எடப்பாடி தொகுதி ஏற்றம் பெற எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். சிஏஏ.,வை திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக, சென்னை அயனாவரத்தில் உள்ள 6வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். மு.க.ஸ்டாலின், கொளத்தூரில் 3வது முறையாக போட்டியிடுகிறார்.
கோவில்பட்டி (218) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுகவின் பொதுச்செயலாளர், டிடிவி தினகரன் எம்எல்ஏ அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் தரிசனம் செய்தார்.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு, இன்று மதியம் 1.40 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.





