தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளுங்கட்சியான அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் முதல்வர் பழனிச்சாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து இலுப்பூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய முதல்வர் பழனிச்சாமி, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்காகவே இலவச வாஷிங் மெஷின் வழங்குவதாக அறிவித்துள்ளோம். விவசாய கடனையும் தள்ளுபடி செய்திருக்கிறோம். விலையில்லா கேஸ் சிலிண்டர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். மேட்டூர் அணை குறித்த வாக்குறுதியை அதிமுக அரசு தான் நிறைவேற்றியது.
இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தமிழகத்தில் கட்டுக்குள் கொண்டு வந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர்தான். மத்திய அரசே அதற்கான, சான்றிதழை வழங்கியுள்ளது. மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறார் என்று தெரிவித்தார்.
நமது அம்மாவின் அரசு ஏற்கனவே நிறைவேற்றிய திட்டங்களை தெரிந்து கொள்ளாமல், மு.க.ஸ்டாலின் அதனை அறிக்கையாக வெளியிட்டிருப்பதாக விமர்சித்த்தார் முதல்வர். தமிழகத்தில் ஏழை சாதி இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும், வீடு இல்லாதவர்களுக்கு அரசே வீடு கட்டிக் கொடுக்கும் என்றும், உறுதியளித்தார்.தற்போது, மீண்டும் கொரோனா பரவ தொடங்கிவிட்டது. தமிழக மக்கள் அனைவரும் தவறாமல், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டு என்று முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.



