தேசிய கட்சியாக இருக்கும் பாஜக, வெற்றியோ, தோல்வியோ அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு இருக்கவேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளின் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, குறிப்பாக அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
அதில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு அதிமுக தலைமைக்குச் சென்ற பாஜக நிர்வாகிகள், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால், தங்களுக்கு கூடுதலாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பாஜக நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக எம்.பி.யும் மூத்த தலைவருமான சுப்ரமணிய சுவாமி, திருப்பதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியபோது, தமிழகத்தில் பாஜக இரண்டு அல்லது மூன்று இடங்களில் வெல்லும். இல்லாவிடில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது.
தேசிய கட்சியான பாஜக, வெற்றியோ தோல்வியோ அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டிருக்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவரிடம் தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் 3ஆம் அணியாக உருவாகியுள்ள கமலஹாசன் குறித்த கேள்விக்கு, யார் கமல் ? அவரும் அரசியலுக்கு வந்துள்ளாரா? என்று கிண்டலாக நக்கலாக கேட்டார்.


