சசிகலாவின் எண்ணம் தற்போது, வேறு மாதிரியாக இருக்கிறது. அவ்வளவு வேகமாக ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்து சபதம் செய்தது மாதிரியான அதிரடியில் சசிகலா இப்போது இல்லை என்கிறார்கள். அவ்வளவு அமைதியில் அவர் இருப்பதாகவே சொல்கிறார்கள்.
சிறை தந்த ஞானமோ, வயது மற்றும் உடல் பிரச்சனைகளினால் எடுத்த முடிவோ என்று தெரியவில்லை. தீவிர அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல்.
பெங்களூரில், சிறை மற்றும் கொரோனாவிலிருந்து விடுதலை ஆன சசிகலா, நந்திமலை அருகே இருக்கும் கோடாகுருக்கி பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவர்கள், உறவினர்கள் என்று அவருடன் 12 பேர் உடனிருக்கிறார்கள்.
விடுதலையானதும் அவரிடமிருந்து வேங்கை பாய்ச்சலை எதிர்பார்த்த அரசியல் பிரமுகர்களுக்கு ஒரே அதிர்ச்சி. தீவிர அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்கவே நினைக்கிறாராம். ஆனால், தனக்காக அமமுகவினை தொடங்கி பாடுபட்டு வரும் டிடிவி.தினகரனுக்கு ஒரு வழி காட்டிவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிடலாம் என்று நினைக்கிறாராம். அதற்காக, அமமுகவை அதிமுகவோடு இணைத்துவிடலாம் என்றும் முடிவெடுத்துள்ளாராம்.
டிடிவி.தினகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும், அமமுகவில் இருக்கும் 35 பேருக்கு சீட் தரவேண்டும், அதுவும் அவர்கள் கேட்கும் தொகுதியில் தரவேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறாராம் சசிகலா. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் அமமுகவை அதிமுகவோடு இணைத்துவிட்டு சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கிவிடலாம் என்றிருக்கிறாராம்.
வரும் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிட்டால் தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு 65 இடங்களிலிருந்து 75 இடங்கள் வெற்றி வாய்ப்பு பறிபோகும் என்று சில சர்வே முடிவுகள் தெரிவித்திருக்கிறது. அமமுக தனித்து போட்டியிட்டால் 50 இடங்களில் இருந்து 80 இடங்கள் வரை அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் என்று துக்ளக் குருமூர்த்தி துக்ளக் விழாவில் சொன்னதையும் அதிமுக கவனத்தில் எடுத்துக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
சசிகலாவின் நிபந்தனையை ஈபிஎஸ்யும்–ஓபிஎஸ்யும் ஏற்றுக்கொள்வார்கள் என்றும், அதற்கான தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.
வருகிற 8ஆம் தேதி அன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் அன்றைக்கு தமிழகம் வர முடிவெடுத்துள்ள சசிகலா, அதற்குள் அதிமுகவிடம் இருந்து தனக்கு நல்ல பதில் வரும் என்று எதிர்ப்பார்த்திருக்கிறாராம்.
ஒருவேளை அதிமுக–அமமுக இணைப்பு நடைபெறாதபட்சத்தில் சசிகலா அரசியலில் இருந்து ஓய்வெடுக்கும் முடிவை கைவிட்டு தீவிர அரசியலை ஈடுபடுவார் என்றும் தெரிகிறது.





