Type Here to Get Search Results !

சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியதை கண்டு கதி கலங்கி டிஜிபி வரை சென்று புகார் : -நமது எம்ஜிஆர் விமர்சனம்!

சசிகலா அதிமுக கொடியை  பயன்படுத்தியதை கண்டு கதி கலங்கி டிஜிபி வரை சென்று புகார் தந்திருக்கின்றனர் என்று நமது எம்ஜிஆர் நாளேட்டில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் மணியோசை ஒலிக்கிறது இனியும் ஏன் தயக்கம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தியாகத் தலைவி சின்னம்மா தனித்துவிடப்பட்டவர் என்று இறுமாப்போடு பேசும் கையாலாகாத, திராணியற்ற, சுயநல கூட்டங்களுக்கு சம்மட்டி அடி கொடுப்போம், கோடி தொண்டர்களின் தியாகத் தலைவி சின்னம்மா என்பதை நிரூபித்துக் காட்டும் ஒரு அருமையான வாய்ப்பு -சந்தர்ப்பம் தேர்தல் களம். காலம் நம்மை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.


கழகக் கொடியை தியாகத் தலைவி சின்னம்மா பயன்படுத்தியது கண்டு துரோக கூட்டம் கலங்குகிறது காவல்துறை டிஜிபி வரை சென்று புகார் தருகிறது. இன்னும் நிகழப் போகும் சம்பவங்கள் ஏராளம்! ஏராளம்!அப்போது என்ன செய்வார்கள் இந்த துரோகிகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அரங்கேற்றங்கள் நடைபெறப்போகிறது. அப்போது எங்கே போய் முறையிட போகிறீர்கள் ? இனியாவது மாறுங்கள்; மாற்றிக்கொள்ளுங்கள். 



இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது; ஏகடியம் பேசுவதையும் இறுமாப்போடு பேசுவதையும் மண்ணை கவ்வ செய்து வெட்கி தலைகுனிய செய்வோம். இப்போதைக்கு இது மட்டுமே நமக்கு ஒரே பணியாக இருக்கட்டும். தீய சக்திக்கு வழிவிட்டு வளர்த்தவர்கள் இடம் வாலாட்டும் குள்ள நரிகளின் கொட்டத்தை அடக்குவோம். தியாகத் தலைவி சின்னம்மா தலைமையில் அம்மாவின் அரசை மீண்டும் ஏற்படுத்தும் என்ற தீராத வேட்கையை, தாயின் லட்சிய கனவை நிறைவேற்ற உறுதி ஏற்று கண் துஞ்சாது களப்பணி ஆற்றுவோம்.


துரோகிகளுக்கு மீண்டும் நியாபகப்படுத்துகிறேன். தியாகத் தலைவி சின்னம்மா தலைமையில் கழகமும் ஆட்சியும் செம்மாந்த நடைபோட வேண்டும். சிலரின் சுயநலத்திற்காக தொண்டர்களின் எண்ணத்தை ஆசையை, சிதைக்க முற்படக் கூடாது. மாபெரும் இயக்கத்தில் கருத்து பரிமாற்றம் முக்கியமே தவிர, கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை களைய முற்பட வேண்டும். 



தற்போது, அதையே பூதாகரமாக்கி தங்களின் அபிலாசைகளுக்கு தீயசக்தி கூட்டத்திற்கு வழி விடாதீர்கள். சுயநலம் அறவே விடவேண்டும்; பொதுநலம் மேலோங்கி பெருக பெருக தொண்டர்களின் எண்ணங்கள் நிறைவேற வேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற குழப்பம் யாருக்கும் வரவேண்டாம். ஏற்கனவே மணியின் ஓசையை நாடெங்கும் ஒலிக்கிறது. தீர்க்கமான, தெளிவான முடிவு எடுத்து, கைகோர்த்து புறப்பட்டு வெற்றிகளை ஈட்டிவோம்; காலம் கடந்துவிடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies