முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார் சசிகலா. அதேசமயம் ஓபிஎஸ் முதல்வர் பதவியிலிருந்து விலகிய நிலையில் முதல்வராக பொறுப்பு ஏற்க இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார்.
இதையடுத்து அதிமுகவில் பல சர்ச்சைகளும், வாக்குவாதங்களும் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இணைந்து கட்சியை வழிநடத்த தொடங்கினர்.ஆனால் கட்சியில் சசிகலாவுக்கு இடமில்லை என்பதை இருவரும் உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உள்ள நிலையில், சட்டவிரோதமாக கட்சியின் செயல்பாடுகளை முதல்வர் மற்றும் துணை முதல்வர் நடத்துவதாகவும், அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளரராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க கோரியும், கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், கட்சியின் 3 வங்கி கணக்குகள் மற்றும் அனைத்து ஆவணங்களையும் அதிமுக தலைமைக் கழக மேலாளர் மகாலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து வங்கிகளின் மேலாளர்கள் வங்கி கணக்குகளை சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் தரப்பிற்கு வழங்கினர். இதனால் இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கு விசாரணை தொடங்கி மூன்று ஆண்டுகள் மேலாகியும் தற்போது வழக்கு பட்டியலிடபடாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால், பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் சசிகலா இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி கேட்க முடிவு எடுத்துள்ளாராம்.
இந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாதான் என்று அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் அதிமுகவுக்கும், ஓபிஎஸ் -ஈபிஎஸ் இருவருக்கும் கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.



