பொள்ளாச்சி, பிப்.15
பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை வைத்து தமிழக முதல்வருக்கு மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்போவதாகவும், இதற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்கவேண்டும் எனவும் இந்துமக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி கோவை தெற்குமாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் கூறியது...
கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் சார்-ஆட்சியர் அலுவலகம் கடந்த 1857ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டுவருகிறது. ஆரம்ப காலத்தில் திருப்பூர், உடுமலைப்பேட்டை, வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய பொள்ளாச்சி வருவாய் கோட்டம் செயல்பட்டுவந்தது. கடந்த 1983ம் ஆண்டு மே மாதம் பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்த திருப்பூர் தனி வருவாய் கோட்டமாக பிரிக்கப்பட்டது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தை தனி மாவட்டமாக உருவாக்கப்படவேண்டும் என்று கோரிக்கை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருகிறது. ஆனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டும் பொள்ளாச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்படாமல் உள்ளது.
பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்ட திருப்பூர், கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி தனி மாவட்டமாக உருவானது. திருப்பூர் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு போதிய பரப்பளவு, மக்கள்தொகை, தாலூக்காக்களின் எண்ணிக்கை போன்றவை போதுமானதாக இல்லாமல் இருந்ததால், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்த உடுமலை பகுதி புதிய கோட்டமாக மாற்றப்பட்டு திருப்பூருடன் இணைக்கப்பட்டது. உடுமலை திருப்பூருடன் இணைக்கப்பட்டவுடன் உடுமலை யில் இருந்து புதிதாக மடத்துக்குளம் வட்டம் உருவாக்கப்பட்டது.
இப்படி பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டதுதான் தற்போது உள்ள உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களாகும்.
தற்போது, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை ஆகிய நான்கு வருவாய் வட்டங்கள் உள்ளது. பொள்ளாச்சி கோட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்கள், 118 ஊராட்சிகள், இரு நகராட்சிகள்,9 பேரூராட்சிகளுடன் உள்ளது. பாராளமன்ற தொகுதியே பொள்ளாச்சி என்ற பெயரில் 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியே உள்ளது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தில் சேக்கல்முடி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட தலைமை இடமான கோவை சென்றுவர 250 கி.மீ., பயணிக்கவேண்டியுள்ளது. வால்பாறை போன்ற மலை வாசஸ் தலத்தில் வசிக்கும் மக்கள் மலைப்பகுதியில் இருந்து கோவை செல்ல 5 மணி நேரத்திற்கும் செல்லவேண்டியுள்ளது.
மீண்டும் திரும்பி தங்கள் பகுதிகளுக்கு செல்ல மீண்டும் 5 மணி நேரம் பயணிக்கவேண்டியுள்ளது. இப்படி தங்கள் குறைகள் அல்லது கோரிக்கைகள் போன்றவற்றை தெரிவிக்க ஒரு நாள் முழுவதையும் செலவிட்டாலும், மாவட்ட ஆட்சியர் போன்றவர்கள் இல்லாமல் போனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுபோன்ற சூழலில் பொள்ளாச்சி தலைமையிடமாக கொண்டு மாவட்ட உருவானால் வால்பாறை மக்கள் தலைமையிடம் வந்து செல்வது பாதி நேரமும், பயணிக்கும் தூரமும் குறையும். இதுதவிர ஆனைமலை தாலூக்காவில் வசிக்கும் மக்களும் கோவை சென்றுவருவதில் 80 கி.மீ பயணிக்கவேண்டும். பொள்ளாச்சி தாலூக்கா மக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல 45 கி.மீ., பயணிக்கவேண்டியுள்ளது.
ஆகவே பொள்ளாச்சியை தலைமை இடமாக கொண்டு மாவட்டம் உருவானால், பொள்ளாச்சியிலேயே வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மக்கள் 15 முதல் 40 கி.மீ தூர பயணத்திலேயே தங்கள் குறைகளை சரிசெய்யமுடியும்.
இதுதவிர பொள்ளாச்சி மாவட்டம் ஆனால் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும். ஆகவே இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடத்துவுள்ளோம். வரும் வெள்ளிக்கிழமை தமிழக முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டத்தை துவங்கவுள்ளோம்.
இதற்கு பொள்ளாச்சி பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் வர்த்தகசபை, விவசாயிகள் மற்றும் பொள்ளாச்சி மாவட்டமாக மாற்ற விரும்புவோர்கள் தாங்களும் முதல்வருக்கு மனு அனுப்பி ஆதரவு தரவேண்டும்.
அப்போதுதான் பொள்ளாச்சி மக்களின் கோரிக்கை முதல்வரை சென்றடையும். இல்லாவிட்டால் மக்களின் கோரிக்கை முதல்வரை சென்றடையாமல் அது கோவை மாவட்டத்துடன் நின்றுவிடும் என்றார்.







