ஓபிஎஸ் நிச்சயம் மன கஷ்டத்துடனே இப்போதும் இருக்கிறார்- டிடிவி தினகரன்
சின்னம்மாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் எடுத்தால் அவரை நிச்சயமாக மனதார வரவேற்பேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலா சென்னை தியாகராய நகர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை தினகரன் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தற்போது இருக்கும் அரசியல் நிலவரம் குறித்தும், அமைச்சர்களின் நிலைகுறித்தும் இருவரும் அலோசித்ததாக தெரிகிறது.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நிச்சயமாக மனது கஷ்டத்துடனே இப்போதும் இருக்கிறார். அவர் ராமர் அருகில் பரதனாக இருக்க வேண்டியவர். இராவணன் அருகில் இப்போது இருக்கிறார். சின்னம்மாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் அவரை நிச்சயமாக வரவேற்பேன். மருத்துவர் அறிவுரைப்படி சின்னம்மாவுக்கு ஓய்வெடுத்து வருகிறார்.
பிப்ரவரி 24ஆம் தேதி அவர் வெளியில் வருவார். சுதாகரனுக்கு அபராதத் தொகை செலுத்த எங்களால் முடியவில்லை. அதனால் தண்டனைக் காலம் முடிந்தாலும் அவரால் வெளியே வரமுடியவில்லை. தொகை தயாரானதும் அவர் வெளியே வருவார். கூட்டணி குறித்து நாங்கள் பாஜகவிடம் ஆலோசிக்கவில்லை. அதிமுக தொடர்பான வழக்கில் சட்டப்படி எங்களுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும். அதிமுக, திமுகவை நம்பாத மக்கள் எங்களுக்கு கிடைக்கும் எனக் கூறினார்.


