மதுராந்தகம் ஆனந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் கோகுல் குமார்(40). இவருக்கும் கீர்த்தனாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. கோகுல்குமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார். அவரது மனைவி கீர்த்தனா மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவமனையில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.
திருமணமான நாள்முதலே மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, கணவன் மனைவி இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது . இதனால், இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இதையடுத்து, மருத்துவர் கோகுல் குமார் சோத்துபாக்கம் பகுதியில் உள்ள இல்லத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில்,மனைவி தங்கியுள்ள வீட்டுக்கு நேற்றுபோன கோகுல் குமார், அவருடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் அங்கிருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதைப்பார்த்த கீர்த்தனாவின் தந்தை தடுத்துள்ளார். அவரையும் தாக்கியுள்ளார். அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மனைவி கீர்த்தனாவை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து, கீர்த்தனா மீது தனது காரை ஏற்றி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் அச்சரப்பாக்கம் போலீசார் தப்பியோடிய கோகுல குமாரை தேடினர், இதையடுத்து, ஆத்தூர் சுங்க சாவடி அருகே சென்று கொண்டிருந்த கோகுல் குமாரை கைது செய்தனர்.
போலீசார் கீர்த்தனாவின் உடல் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீர்த்தனாவின் தந்தைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


