அதிமுக அரசு ஊழலை மறைக்கத்தான், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை வண்டியூரில் அரசியல் எழுச்சி மாநாடு நடந்தது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், வைகோ உள்ளிட்ட பல தமிழக அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டர்.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், மோடி அரசு மக்கள் மீது பொருளாதார தாக்குதல் நடத்துகிறது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு போன்றவை தான் மோடி அரசு மக்களுக்கு அளிக்கும் பரிசு. தொழிலாளர்களின் தோழனாகவும், பாட்டாளிகளின் பாதுகாவலானாகவும் உள்ள கட்சி இந்திய கம்யூனிஸ்ட்.
வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு மட்டுமில்ல; கொள்கை மாற்றத்திற்காகவும் தான். இந்த மாநாடு இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு போல் இல்லை; திமுக திருச்சி மாநாடு போன்ற உணர்வை அளிக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக மூலம் பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. அதிமுக அரசு தனது ஊழலை மறைக்கத்தான், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
விவசாயிகளுக்கு துரோகம் செய்த மோடி, ஔவையார் பாடலை பாடலாமா? இது பெரியார், அண்ணா, காமராஜர், தோழர் ஜீவா, கலைஞரால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு என்பதை நாம் நிரூபித்து காட்ட வேண்டும் என்றார்.


