திண்டிவனத்தில் உள்ள தமிழக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசு ஒப்பந்ததாரர் குமார் என்பவர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டிவனம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் டி.கே.குமார் இவர் அரசு ஒப்பந்ததாராக உள்ளார்.
விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித் துறை மூலமாக பல்வேறு சாலை பணிகளை ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறார். மேலும், இவர் திண்டிவனம் அருகே எம்.சான்ட் மணல் குவாரியும் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில், இன்று காலை 5 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர், திண்டிவனத்தில் உள்ள குமார் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றால் திமுக வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக மத்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதனால், அதிமுகவில் பிரிந்து கிடக்கும் சசிகலா மற்றும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் ஒன்றாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என பாஜக தலைமை திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பெற்ற அமைச்சர்கள் சிவி சண்கமும், அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி, ஓஎஸ் மணியன், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட சிலர் பெரும் தடையாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், இவர்கள் மீது பாஜக பெரும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் சிவி சண்முகத்தின் உறவினர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. அடுத்து எந்த அமைச்சர் உறவினர் வீட்டில் சோதனை நடைபெறும் என தெரியவில்லை.இதனால், அதிமுவினர் கிலியில் உள்ளனர்.



