கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், அதிமுக எம்.எல்.ஏவுமான உ.தனியரசு சசிகலாவை சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சசிகலாவை விரைவில் கருணாஸ் சட்டமன்ற உறுப்பினர் சந்திக்கவுள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லத்தில் சசிகலா தங்கியுள்ளார்.
போயஸ்கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை அரசுடையாக்கிய நிலையில், அதன் நேர் எதிரில் சசிகலா பிரமாண்ட பங்களா கட்டி வந்தார். ஆனால், அங்கு அவர் தங்க அரசு தடை விதித்ததால், இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியாவின் இல்லத்தில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை, உ.தனியரசு சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உ.தனியரசு, கொங்கு பேரவை நிறுவனராக இருந்தாலும், தற்போது அவர் அதிமுக எம்எல்ஏவாக உள்ளார்.
சசிகலாவின் உடல்நலன் குறித்து விசாரிப்பதற்காக சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்பு அரசியல் ரீதியிலான சந்திப்பாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக உ.தனியரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ, கடந்த முறை அதிமுகவில் பிரிவு வந்தபோது, முதலில் சசிகலா அணியிலும், பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



