சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'மக்கள் கிராம சபை கூட்டம்' என்ற பெயரில் மக்களை சந்தித்து வந்தார்.
தற்போது 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில், மாவட்டந்தோறும் என்று பிரசாரம் செய்து வருகிறார். ஆளும் அதிமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மக்களிடம் மனுக்களாக பெற்றும் வருகிறார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கானையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,பொதுமக்கள் அளித்துள்ள மனுக்களை வாசித்து அதற்கான தீர்வு குறித்து பேசி வந்தார்.
பெண் ஒருவர் எழுந்து நாங்கள் புதுச்சேரி எல்லையோரத்தில் இருக்கிறோம்; அதனால், அங்குள்ள குப்பைகளை எங்கள் கிராமத்தில் கொடுக்கிறார்கள். இதனால், பல நோய்கள் வருகிறது என்றார். அதற்கு ஸ்டாலின், அங்கு நம் கூட்டணி கட்சி தான் ஆட்சியில் உள்ளது; என்னவென்று பேசி உடனடியாக தீர்வு வரும் படி செய்கிறேன் என்றார்.
மேலும், வேறொரு பெண் தனது பிள்ளைகளுக்கு கல்விக்கடன் வாங்கி சிரமப்படுவதாக கூறினார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ” திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்” என்று மீண்டும் அறிவித்துள்ளார்.
இதை முதல்வர் பழனிச்சாமி அறிவித்தாலும் அறிவிப்பார். கேட்டால் நான் செய்வதை தான் அவர் சொல்கிறார் என்பார். யார் காலிலும் விழ கூடாது என்று கூட தான் நான் சொல்கிறேன்; அவர் கேட்கிறாரா? டெண்டர் விடுவதிலும், ஊழல் செய்வதிலும் தான் அதிமுக அக்கறை காட்டுகிறது” என்றார்.மக்கள் தங்கள் குறைகளைப் பகிரும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சி விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் இருந்து நேரலை. https://t.co/3jEdvVRLFL
— M.K.Stalin (@mkstalin) February 12, 2021


