ஒரு யானை இறப்பு என்பது பலப்பல லட்சம் மரங்கள் அழிக்கப்படுவதற்கு சமம்
தமிழகத்தில் தொடர்ந்து யானைகள் இறப்பதை கொல்லப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான மனுவில், “தமிழகத்தில் தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவது வாடிக்கையாகிவருகிறது.
அதேபோல யானைகளின் வழித்தடம் மறிக்கப்படும் பட்சத்தில் அது யானைகள்-மனித மோதலாக மாறுகிறது. இதனால் வனத்தில் யானைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. இதனைத் தடுக்க சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை மீண்டும் தொடங்கியது. அப்போது வனவிலங்கு குற்றத்தடுப்பு சிறப்புப் பிரிவின் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதன் பின்னணியில் மிகப்பெரிய மாபியா கும்பலே செயல்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஆராய்ந்த நீதீபதிகள் சுந்தரேஷ், சதீஷ் குமார் தமிழ்நாட்டில் யானைகள் இறப்பு குறித்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டனர்.
மேலும் அத்தீர்ப்பில், “யானை மிகவும் முக்கியமான உயிரினம். அவை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. யானை வேட்டையில் தொடர்புடையவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ளனர். அதனால் யானைகள் இறப்பு விவகாரத்தில் தமிழகத்தைத் தாண்டிய விசாரணை என்பது அவசியமாகிறது.
யானை இறப்பு விவகாரத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுவது ஏற்கத்தக்கதல்ல. யானைகளைப் பாதுகாப்பது நமது கடமை. ஆகவே தமிழகத்தில் யானை இறப்பு குறித்த அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.



