Type Here to Get Search Results !

இன்று தை அமாவாசை: இன்நாளில் தர்ப்பணம்-சிரார்த்தம் கொடுப்பது நல்லது

ஓராண்டில் 96 முறை தர்ப்பணம் கொடுக்கலாம் என்று சாஸ்திரம் சொன்னாலும், ஆடி அமாவாசை, மகாளயம் அமாவாசை, தை அமாவாசை மிகவும் விசேஷமானது. இன்றைய நாளில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தனம் என இரண்டையும் செய்யலாம்.

தர்ப்பணம் என்பது மறைந்த முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இரைத்துச் செய்யும் வழிபாடாகும். ஒவ்வொரு அமாவாசை அன்றும் இதை செய்யலாம். தர்ப்பணம் செய்த பின்பு வீட்டில் தலைவாழை இலை போட்டு உணவு படைத்து, அன்னதானம் வழங்கி பிறகு சாப்பிட்டால் புண்ணியம்.


சிரார்த்தம் என்பது இறந்த ஒருவரை நினைத்து அவர் இறந்த அதே திதியில் கொடுப்பது.


ஒருவன் தன் பெற்றோர், குல தெய்வம், முன்னோரை வணங்காவிட்டால் வேறு எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கி பலனில்லை என்று சொல்கிறது சாஸ்திரம். எனவே, தை அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதுன் மூலம் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.

ஆடி அமாவாசை என்பது மறைந்த மூத்தவர்கள் தம் வழி மரபினரைப் பார்க்க பூமிக்கு புறப்படுவதாக ஐதீகம். மகாளய அமாவாசையன்று அவர்கள் பூமிக்கு வந்து சேர்கின்றனர். தை அமாவாசை அன்றுதான் நாம் அளிக்கும் எள், தண்ணீரைப் பெற்றுக்கொண்டு நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் உலகத்துக்கு திரும்புகின்றனர்.



எனவே, தை அமாவாசை அன்று நம் வீட்டு வாசலில் நாம் கொடுக்கப் போகும் எள், தண்ணீருக்காக முன்னோர்கள் காத்திருப்பார்கள் என்பது நம்பிக்கை. அப்படி காத்திருக்கும் முன்னோர்களை ஏமாற்றிவிடாமல் அவர்களுக்கு எள், தண்ணீர் படைக்க வேண்டும் என்கின்றது சாஸ்திரம்.


தை அமாவாசை இன்று (பிப்ரவரி 11, வியாழக்கிழமை) வருகிறது. இன்றைய தினம் காலையில் எழுந்து குளித்து நீராடி, முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்கலாம். அதுவரை வீட்டில் கோலம் போடுதல், பூஜை அறையில் விளக்கேற்றுதல் போன்ற கடவுளுக்குரிய எதையும் செய்யக் கூடாது. தர்ப்பணம் முடித்த பிறகு வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.

காலையிலிருந்து விரதம் இருந்து, முன்னோருக்குப் பிடித்த உணவைத் தயாரித்து காகத்துக்குப் படைத்து அதன் பிறகு நாம் உட்கொள்ள வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக் கீரை போன்றவற்றை முந்தின தினமே உறவைத்து பசுமாட்டுக்கு தானம் வழங்கத் தயாராக இருக்க வேண்டும்.


இன்றைய தினத்தில் அசைவ உணவு எடுக்கக் கூடாது. தர்ப்பணம் தரும் எள்ளை மற்றவர்களிடமிருந்து கடனாக வாங்கக் கூடாது. தரையிலிருந்து தரையிலும், தண்ணீரிலிருந்தால் தண்ணீரிலும் தர்ப்பணம் அளிக்க வேண்டும். கிழக்கு பக்கமாகப் பார்த்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.


நாம் படைத்த உணவு முன்னோர்க்குத் திருப்தி அளித்தால் அவர்கள் மனம் குளிர்ந்து நமக்கு நல்லாசி வழங்குவார்கள். இந்த நல்லாசி குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies