வாகனங்கள் வாங்குவதற்காக கடன் வழங்கும் வங்கிகள், எரிபொருள் பெட்ரோல்-டீசல் வாங்குவதற்கும் வங்கிகள் கடன் வழங்க வேண்டிய நேரம் விரைவில் வரும் என்று சசி தரூர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசுகையில் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில் சுகாதாரம், நிதி ஊக்குவிப்பு, பாதுகாப்பு மற்றும் விவசாயம் ஆகியவை குறிப்பாக குறைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மற்றும் சுகாதார துறைகளில் ஒதுக்கீடு தொடர்பாக மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. லால் பகதூர் சாஸ்திரி, ஜெய் கிசான், ஜெய் ஜவான் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த பட்ஜெட்டில் ஜவானும் இல்லை கிசானும் இல்லை.
நடுத்தர மக்களின் தேவையான நேரத்தில் அவர்களை இந்த கடுமையான பட்ஜெட் புறக்கணித்தது. நடுத்தர மக்களுக்கு வரி விகிதங்களில் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. எரிபொருள் விலையில் அதிகரிப்பை வழங்கி உள்ளீர்கள். பெட்ரோல் மீதான கலால் வரி 2014ம் ஆண்டு முதல் 348 சதவீதம் உயர்ந்துள்ளது. விரைவில் வங்கிகள் எரிபொருள் கடன்களை வழங்க வேண்டியிருக்கும்.
டீசல் மானியத்தை அரசாங்கம் வழங்கவில்லை. இதனால் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஆயிரக்கணக்கான தேயிலை தொழிலாளர்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. இந்தியர்களிடம் நல்ல நாட்களில் இருந்த கனவுகள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் தகனம் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



