அதிமுகவின் அரசு மீதான 2ஆம் ஊழல் பட்டியல் தயார்; விரைவில் ஆளுநரிடம் அளிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது அதன்படி திமுக–அதிமுக பிரதான கட்சிகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி மக்கள் கிராம சபை என்ற பெயரில் மக்களை சந்தித்து வந்த ஸ்டாலின், தற்போது தேர்தல் பிரச்சாரமாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பரப்புரையை கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரையில் கலந்துகொண்டுள்ள மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். இதயமற்ற முறையில் தமிழக அரசு ஆசிரியர்களுக்காக கலந்தாய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெற்றிநடை போடும் தமிழகம் என விளம்பரம் கொடுக்கிறார்கள். இது வெற்றிநடை அல்ல; வெற்று நடை. அதிமுகவின் வளமான ஆட்சிதான்; ஆனால் அது மக்களுக்கு அல்ல; அதிமுகவினருக்கு மட்டுமே வளமான ஆட்சி. அதிமுக அரசு மீதான 2ஆம் ஊழல் பட்டியல் தயார்; விரைவில் ஆளுநரிடம் அளிக்கப்படும்' என்றார்.


