Type Here to Get Search Results !

மத்திய அரசு மக்களுக்கு தந்த கொடூரப் பரிசு: சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை ‘செஞ்சுரி’ அடிக்கப்போகிறது -ஸ்டாலின் கண்டனம்!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சமையல் கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.50 அதிகரித்து ரூ.785 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ஆம் தேதி அன்று ரூ.25 உயர்ந்த நிலையில், தற்போது ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், வெங்காயம், கேஸ் சிலிண்டர் விலையேற்றம் உள்ளிட்டவை சாமானிய மக்களின் கழுத்தை நெரிக்கிறது. 


இதனால், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சட்டப் பேரவை தேர்தலைக் கருத்தில் வைத்து, பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். 


மதுரை 'எய்மஸ்' மருத்துவமனையின் நிலை என்னவென்று தெரியாத தமிழக மக்கள், பிரதமரின் புதிய அறிவிப்புகளின் தன்மையையும் தரத்தையும் நன்கு அறிவார்கள். அவர் வாயால் அறிவிக்கப்படாத ‘பரிசாக’ கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது.



பொதுமக்கள் பயன்படுத்தும் மானியத்துடனான சமையல் கேஸ் சிலிண்டருக்கு கொரோனா காலத்தில் ஒரே மாதத்தில் 100 ரூபாய் விலை உயர்த்தி, வதை படு படலத்தைத் தொடங்கிய பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தற்போது மானியமில்லாத சிலிண்டர் விலையையும் ரூ.50 உயர்த்தி தேநீர்க்கடை, சிறு உணவகம் போன்ற எளிய மக்களின் வணிகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தநிலையியல், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக விலை உயர்வுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சர்வதேசச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு மேல் விற்பனையானபோது, ரூ.450 முதல் ரூ.500-க்குள்ளான விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்கப்பட்டது. அதற்கே பா.ஜ.க.வினர் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆனால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், அதை வேண்டுமென்றே கணக்கில் கொள்ளாமல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை தொடர்ந்து  உயர்த்திக் கொண்டே இருக்கிறது. 


தற்போது 750 ரூபாய்க்கும் அதிகமாகச் சமையல் கேஸ் சிலிண்டருக்கு விலை கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு மக்களைத் தள்ளியுள்ளது பா.ஜ.க. அரசு. பெட்ரோல் விலை ‘செஞ்சுரி’ அடிக்கப்போகிறது. டீசல் விலை அதனைப் பின் தொடர்கிறது. சமையல் கேஸ் விலை விண்ணைத் தொடுகிறது. 

தற்போது, இந்திய மக்களுக்கு,பிரதமர்  மோடியும் அவரது அமைச்சரவையும் தருகின்ற கொடுமையான பரிசுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 


மக்களுக்கு இத்தகைய பரிசுகள் தேவையில்லை. அவர்கள் நிம்மதியாக வாழும் வகையில், வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தைக் கைவிட வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies