அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மீண்டும் சர்ச்சை கிளம்பியது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செயலுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு கொடுத்த கண்டனத்திற்கு, பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, வன்னி அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அண்ணன் சீமான் மாவீரன் இம்மானுவேல் சேகரனுக்கும் வீரவணக்கம் போஸ்டர் ஒட்டுகிறார். முத்துராமலிங்க தேவருக்கும் போஸ்டர் ஒட்டுகிறார். கொலைகாரனுக்கும் போஸ்டர் ஒட்டுகிறார். அவரால் கொல்லப்பட்டவருக்கும் போஸ்டர் ஒட்டுகிறார். இரண்டையும் ஒரே சமதளத்தில் வைத்து பார்ப்பது எப்படி சரியாகும்?’’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் வன்னி அரசு.
மேலும், சமூக வலைத்தளம் ஒன்றிக்கு வன்னி அரசு அளித்த பேட்டியில், சாதிய ஆதிக்கத்தினை முன்வைத்து சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஒருவரை சாதியவாதிகள் படுகொலை செய்கிறார்கள். இரண்டையும் ஒரே சம தளத்தில் வைத்து பார்ப்பது எப்படி சரியாகும்? சாதி ஒழிப்பிற்காக முத்துராமலிங்க தேவர் போராடினார் என்று சீமான் சொல்லுவது தன்னிடம் இருப்போரை ஏமாற்றுவதற்காக, தன்னிடமிருக்கும் சாதியவாதிகளை சமரசப்படுத்துவதற்காகவும், அவர்களை பேலன்ஸ் செய்வதற்காகவும் சொல்கிறார்.
ஆனால், முத்துராமலிங்கர் சாதி பற்றி அருவருப்பாகவும், மோசமாகவும் பேசிய வார்த்தைகளின் ஆடியோ இப்போதும் இருக்கிறது.
இறந்துவிட்டார் என்பதற்காக எல்லாவற்றையும் மறந்துவிட்டு தூக்கி கொண்டாட வேண்டிய அவசியமில்லை. இளைஞர்களுக்கு அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்’ என்று எச்சரிக்கிறார்.
இமானுவேல் சேகரன் எப்படி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை குற்றச்சாட்டில் முத்துராமலிங்க தேவர் எப்படி வந்தார்? இதுகுறித்து தனியாக புத்தகமே வந்திருக்கிறது. அதை படித்துவிட்டு என்னிடம் சொல்லட்டும் சீமான், என்று சவால்விடும் வன்னி அரசு.
இன்னும் சொல்லப்போனால், நாங்களும் நினைவை போற்றுகிறோம் என்கிற பெயரில் ஒருபக்கம் கொல்லப் பட்டவரையும், இன்னொரு பக்கம் கொலை குற்றம் சுமத்தப்பட்டவரையும் வைத்து மரியாதை செய்வது என்பது சாதி ரீதியாக சமரசம் செய்து கொள்வது ஆகும் என்கிறார்.
வன்னி அரசுவின் இந்த பேச்சுக்கு, தேவர் பெருமகனாரை இழிபடுத்தி பேசிய, அந்த தீய சக்தியின் மீது, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் எச்.ராஜா.
தேவர் பெருமகனாரை இழிவாக பேசிய தீய சக்தியின் மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilNadu pic.twitter.com/zmVs1uSOHb
— H Raja (@HRajaBJP) February 18, 2021