தமிழகத்தில் எங்கேயும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படவில்லை என்று கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக – திமுக கட்சிகள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள்.திமுகவை பொறுத்தவரையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பரப்புரையை மேற்கொண்டு வரும் எம்.பி. கனிமொழி திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், 'வெற்றிநடைபோடும் தமிழகம் என்று கூறிவிட்டு முதல்வர் தான் நடக்கிறார். தமிழகம் வெற்றி நடை போடவில்லை; ரேஷன் கடைகள் நியாய விலைக்கடைகளாக நடக்க வேண்டும். ஆனால் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. தமிழகத்தில் எங்கேயும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படவில்லை' என்றார்.
முன்னதாக தமிழகத்தில் நடக்கும் நலத்திட்டங்கள் எதுவும் கனிமொழி கண்ணுக்கு தெரியவில்லை; அவர் கண்ணில் கோளாறு என்று முதல்வர் பழனிச்சாமி விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த கனிமொழி, கண்ணில் கோளாறு என்றால் சரி செய்துவிடலாம்; ஆனால் முதல்வர் பழனிச்சாமி தமிழ்நாட்டுக்கு கோளாறு” என்றார்.


