Type Here to Get Search Results !

பிஜேபி அரசின் நயவஞ்சகமும், அதிமுக அரசின் கையாலாகாதத்தனத்திற்கும் தகுந்த பாடத்தை வரும் தேர்தலில் கட்டாயம் புகட்டுவோம் - சீமான்

7 தமிழர்  விடுதலையில் தன்னால் முடிவெடுக்க முடியாது என்று இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக அரசின் தீர்மானந்தினை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிராகரித்திருப்பதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தருமபுரி மாணவிகள் எரிப்பு வழக்கில் ஒப்புதல் கையெழுத்திட்டு ஒரே நாளில் விடுதலையைச் சாத்தியப்படுத்த முடிந்த ஆளுநர் 7 தமிழர் விடுதலைக்கு மட்டும் விதிவிலக்கை முன்வைப்பது ஏன்? என்ற கேள்வியினை முன்வைக்கிறார்.



இதுகுறித்து, அவரது அறிக்கையில், 7 தமிழர் விடுதலைக்காக தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டுக் காலம் தாழ்த்தியதோடு மட்டுமில்லாது, முடிவெடுக்க மேலும் ஒருவார காலம் அவகாசம் கேட்டு இறுதிநாள் முடியும்வரை கள்ளமௌனம் சாதித்துவிட்டுத் தற்போது 7 தமிழர் விடுதலை குறித்து குடியரசு தலைவர்தான் முடிவுசெய்ய வேண்டுமென்று தமிழக ஆளுநர் கைவிரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார்.


தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழக அமைச்சரவையின் முடிவைத் துளியும் மதித்திடாது மக்களாட்சித் தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது என்கிறார்.



மேலும், ஆளுநர் முடிவைத் தெரிவிக்க உச்ச நீதிமன்றமே காலக்கெடு நிர்ணயித்து வழிகாட்டி இருக்கும் நிலையில் தனக்கு அதிகாரமில்லை என ஆளுநர் கூறியிருப்பது அப்பட்டமானப் பச்சைப்பொய்யாகும். ஒரு மைத் துளியில் கையெழுத்திட்டால் நாளையே 7 தமிழரும்  விடுதலையாகலாம் எனும் வாய்ப்பு இருக்கும்போது அதனை மூடி மறைத்து, அதிகாரமில்லை எனக் கூறுவது ஆகப்பெரும் மோசடித்தனம்.


தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை இரண்டாண்டுகள்  கிடப்பில் போடும்போது தெரியாத அதுகாரமின்மை, இப்போது தெரிகிறதா ஆளுநருக்கு? இதென்ன ஏமாற்று நாடகம்? தருமபுரி மாணவிகள் எரிப்பு வழக்கில் ஒப்புதல் கையெழுத்திட்டு ஒரே நாளில் விடுதலையைச் சாத்தியப்படுத்த முடிந்த ஆளுநர் 7 தமிழர் விடுதலைக்கு மட்டும் விதிவிலக்கை முன்வைப்பது ஏன்? இந்த வழக்கில் இறந்துபோனவர் முன்னாள் பிரதமர் என்பதாலேயே சட்டவிதிகளும், சனநாயக மரபுகளும் காற்றில் பறக்கவிடப்படுவது விதிமீறலில்லையா? என்ற கேள்வியை முன்வைக்கிறார்.



இது தொடர்ந்து, எல்லோருக்கும் நீதி ஒன்றுதான் என அரசியலமைப்புச் சட்டம் கூறும்போது அதற்கு நேரெதிராக ஆளுநர் நடந்து கொள்வதன் மூலம் யாரை திருப்திப்படுத்த முனைகிறார்? ஒட்டுமொத்த தமிழினமும் 7 தமிழர் விடுதலைக்காக ஒற்றைக்குரலெடுத்து முழங்கிக்கொண்டிருக்கும் நிலையில் 7 தமிழர் விடுதலையை ஆளுநர் நிராகரிக்கிறாரென்றால், அது அதிகாரத்திமிரில்லையா? என்றும்,


இந்தநிலையில், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க தமிழக மக்களை இன உணவற்ற பிணங்கள் என்று நினைத்துவிட்டாரா ஆளுநர்? வேண்டும் என்றே, 7 தமிழர் விடுதலையைத் தடுத்து முட்டுக்கட்டைப் போட்டு, இழுத்தடித்துச் சட்டத்தையும், சனநாயகத்தையும் அவமதித்து எட்டுகோடித் தமிழ் மக்களின் உணர்வுகளையும் சீண்டிப் பார்க்கிறாரா ஆளுநர்? என்றும்,



தமிழக ஆளுநரின்  இச்செயல் தமிழகத்தில் மிக மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிட்டாரா ஆளுநர்? இந்த முடிவை எடுக்க ஆளுநர் இரண்டு ஆண்டுகள் அந்தக் கோப்பினைக் கிடப்பில் போட வேண்டிய அவசியம் என்ன? என்று அடுக்கடுக்கான கேள்வியை முன்வைக்கும் சீமான்,



7 தமிழர் விடுதலையில் நடக்கும் அரசியல் கண்ணாமூச்சி ஆட்டங்களைக் கண்டுக்கொதித்துப் போயிருந்த உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் மேலும் நெருப்பை அள்ளி கொட்டியுள்ளது ஆளுநரின் நடவடிக்கை என்று வேதனை தெரிவிக்கிறார்.


மீண்டும் முதலிருந்து  குடியரசுத்தலைவரின் அலுவலகத்தின் கதவுகளை இன்னும் எத்தனை ஆண்டுகள் தட்ட வேண்டும்? இனி குடியரசுத்தலைவரை வலியுறுத்தி தீர்மானங்கள், அமைச்சரவை முடிவு என்று அரசியல் நாடகங்களின் அடுத்த அத்தியாயங்களை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நடத்தப்போறீர்கள்? அற்புதம்மாளுக்கு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதி என்னானது? அதனைச் செயல்படுத்த எடப்பாடி பழனிச்சாமி அரசு முன்னெடுத்த நகர்வுகள் என்னென்ன? எதற்குப் பதிலுண்டு? என்று கேட்கும் சீமான்,


பிஜேபி அரசின் நயவஞ்சகமும், அதிமுக அரசின் கையாலாகாதத்தனமுமே, தற்போது, கைகளுக்கு வந்த விடுதலையைத் தட்டிப் பறித்திருக்கிறது. அதற்கான தகுந்த பாடத்தை வரும் தேர்தலில் கட்டாயம் புகட்டுவோம் எனச் சூளுரைக்கிறேன் என்று எச்சரிக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies