திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கயிருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் சென்னைக்கு வந்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், சசிகலா விடுதலை, அவர் பெங்களூரிலிருந்து தமிழகம் வருகையின்போது கொடுக்கப்பட்ட எழுச்சி வரவேற்புகள், ஜெயலலிதா நினைவிடம் திறப்பு மற்றும் தற்போது அவசரநிலையில் மூடல் என பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இதனிடையே தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, இவரை கடந்த 2014-ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
திமுக கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாகவும், அவருக்கும் ஸ்டாலினுக்கும் இடையே சில மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்குப்பிறகு திமுகவில் இணைய முடியாமல் இருந்த மு.க.அழகிரி, விரைவில் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால், திமுகவில் அழகிரி கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துவருகிறார்.
இந்நிலையில், மு.க.அழகிரி சென்னைக்கு வந்துள்ளதாகவும், தற்போது கருணாநிதியின் மகள் 'செல்வி' வீட்டில் தங்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரில் இருந்த செல்வி, மு.க.அழகிரி வருகையை அடுத்து தற்போது, இன்று சென்னைக்கு வந்துள்ளார். மு.க.அழகிரியை சமாதானப்படுத்தி, திமுகவில் இணைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




