பொள்ளாச்சி தனிமாவட்டமாக மாற்றக்கோரி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
பொள்ளாச்சி மாவட்டமாகும் அனைத்துவிதமான தகுதிகளும் இருந்தும், பல அரசியல் காரணங்களுக்காக மாவட்டம் ஆகாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இந்தநிலையில், வால்பாறை, முடீஸ், சோலையாறு, சின்கோனா, ஹைபாரஸ்ட் போன்ற பகுதி வாழும் மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டும் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏதாவது ஒரு பணி நிமிர்த்தமாக வரவேண்டும் என்றால், அவர்கள் கோயம்புத்தூர் செல்ல குறைந்தது 5 அல்லது 6 மணிநேரமாகிறது. திரும்ப செல்லவும் அதே நேரமாகிறது. மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1857-ம் ஆண்டே பொள்ளாச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு, பொள்ளாச்சி கோவை மாவட்டத்தில் கோட்டமாக மாற்றப்பட்டது. அப்பொழுதே சார் ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டு, சார் ஆட்சியர் தலைமையில் நிர்வாகம் நடைபெற்று வந்தது.
திருப்பூர், பொள்ளாச்சி கோட்டத்தின் கீழ் வட்டமாக செயல்பட்டு வந்தது. தற்போது, மாவட்டமாக்கப்பட்டு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், 50 ஆண்டு காலமாக பொள்ளாச்சி மாவட்டமாக கோரிக்கை இருந்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
பொள்ளாச்சி மாவட்டமாகும் தகுதி இருந்தும் தனி மாவட்டமாக இருப்பது வேதனை அளிக்கிறது. பல்வேறு அரசியல் காரணங்களால் பொள்ளாச்சி மாவட்டம் ஆக்கப்படாமல் உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பொள்ளாச்சியை மாவட்டமாக்கக்கோரி தற்போது, பொதுமக்களிடையே எழுச்சி உருவாகிவருகிறது.
இந்நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி, சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.


