கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களாக விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்னும் பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
கள்ளக்குறிச்சி அடுத்த சங்கராபுரம் தொகுதியில், தமிழகத்திற்கு முறையாகச் சேர வேண்டிய நிதியையே கேட்டுப்பெற முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கு தேர்தலில் உரிய பாடம் புகட்டுவோம் என்று உதயநிதி பேசினார்.
மேலும், உளுந்தூர்பேட்டை தொகுதி செண்டநாட்டில் விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார். விவசாயிகளை நலிவடையச் செய்து கார்ப்பரேட்டுகளை மட்டும் வளர்த்தெடுக்கும் ஆதிக்க அடிமை கூட்டணிக்கு முடிவு கட்டுவோம் என பேசினார்.
அத்தோடு, சங்கராபுரம் தொகுதி புதுபாலபட்டில் கரும்பு விவசாயிகள்–பழங்குடியின மக்கள் மத்தியில் உரையாற்றினார். இலவச மின்சாரம், 7000 கோடி விவசாயக் கடன் ரத்து என்பன போன்ற திட்டங்களை தந்த கலைஞர் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றார்.
ரிஷிவந்தியம் தொகுதி மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் கழகத்தினர் பொதுமக்கள்-விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய போது அறவழி போராட்டங்களை நசுக்க வன்முறையை கட்டவிழ்த்துவிடும் பாசிச- அடிமை அரசுகளின் அடக்குமுறைப்பற்றி பேசினார்.
ரிஷிவந்தியம் தொகுதி பகண்டை கூட்டுரோட்டில் திரண்டிருந்த பொதுமக்கள், கழகத்தினர் மத்தியில் கலந்துரையாடியபோது, உதயநிதி பேசியதை பொதுமக்கள் ஆமோதித்தனர்.
சங்கராபுரத்தில் பிரச்சார வாகனத்தில் நின்றபடியே, அதிமுக – பாஜகவை கடுமையாக விமர்சித்துவிட்டு, என் மேல் வழக்கு போட்டாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு பேச்சை முடித்தார்.
அப்போது போதை ஆசாமி ஒருவர் சரசரவென்று பிரச்சார வேனின் மீது ஏறினார். இதைக்கவனித்த உதயநிதி சுதாரித்துக்கொண்டு வேனுக்குள் செல்ல முயற்சித்தார். அதற்குள் உதயநிதியை போதை ஆசாமி நெருங்கிவிட்டார். ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்து, அருகே வந்தவரின் கைகளை உதயநிதி இறுக பிடித்தார். ஆனாலும் அந்த ஆசாமி உதயநிதியின் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டார். இதனால் பேயறைந்தது மாதிரி ஆகிவிட்டார் உதயநிதி.



