நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றிவந்த "ஒற்றை கொம்பன்" யானையை பிடிக்க, வனத்துறை சார்பில் ஐந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அடுத்த சேரம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த டிசம்பர் மாதம் அடுத்தடுத்து 3 பேரை ஒற்றை கொம்பன் யானை மிதித்துக் கொன்றது. அந்தப்பகுதி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திய, இந்த கொம்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், அது கேரள வனப்பகுதிக்குள் நுழைந்துவிட்டது.
கொம்பன் யானையின் நடமாட்டத்தை இரு மாநில வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த யானை மீண்டும் சேரம்பாடி பகுதிக்கு வந்தது தெரியவந்தது. இதனால், சேரம்பாடி சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையடுத்து, ஒற்றை கொம்பன் யானையை பிடிக்கும் பணியை, மாவட்ட வனத்துறை மீண்டும் துவங்கியிருக்கிறது. இதற்காக, 5 கும்கி யானைகள் சேரம்பாடி பகுதிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் யானைகளை பிடிக்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்ட உதவி வனப் பாதுகாவலர்கள் இருவர் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்புக் குழுவும் நீலகிரிக்கு வந்தடைந்துள்ளது.
இந்தநிலையில், கோவை மண்டல முதன்மை வன பாதுகாவலர் அன்வர்தீன் தலைமையில், வனத்துறையினர் யானையை தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், நாளை மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் வனத்துறையினர் கேட்டுகொண்டுள்ளனர்.




