தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக விளையாடும் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். ஆன்லைன் சூதாட்ட தடை விதிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆன்லைனில் சூதாடுவோருக்கு 6 மாதம் சிறை, ரூ.5,000 அபராதம்.
தமிழகத்தின் சட்டப்பேரவையின் 3ஆம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரைக்கு அவையின் தொடக்கத்தில் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதன்பிறகு, ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியது.
இதையடுத்து, தற்போது ஆன்லைன் மூலமாக சூதாட்டத்தை தடை விதிக்கும் சட்ட மசோதாவை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை நீடிக்கும் சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, ஆன்லைன் மூலமாக சூதாடியதால் பணத்தை இழந்து, செய்வதறியாமல் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக, மக்கள் குரலெழுப்பியதால், தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தடை விதித்து, அவசர சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டத்திற்கு மாற்றாக தற்போது இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டியிருக்கிறது.
ஆன்லைனில் மூலம் சூதாடுவோருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க, இச்சட்டம் வழிவகை செய்யும். மேலும், ஆன்லைன் சூதாட்ட அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவிக்கிறது.



