Type Here to Get Search Results !

மாஸ் என்ட்ரி கொடுக்க சசிகலா ரெடி: வரவேற்க 6 அமைச்சர்கள், 50 எம்எல்ஏக்கள் தயார்!

திரைப்படங்களில் வரும் கட்சி போல, குறிப்பாக பாகுபலி படத்தில் ராஜமாதா கேரக்டர் என்ட்ரியை மிஞ்சும் அளவிற்கு அதிமுகவின் ராஜமாதாவாக சசிகலாவின் என்ட்ரிக்கு,  தமிழ்நாட்டில்  ஒவ்வொரு நாளும் வெளியாகிற செய்திகள் ஒவ்வொன்றும் அதிர்ச்சிகரமாகவே இருக்கிறது. 




தற்போது  வெளியான தகவல்கள் தான் முக்கியத்துவம் வாய்ந்தது. பிப்ரவரி 8ஆம் தேதி சசிகலா தமிழகம் வரவிருக்கிறார். அவருக்கு 50 எம்எல்ஏக்களும் 6 அமைச்சர்களும் பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை மெரினாவில் கடலே தெரியாதளவிற்கு மக்கள் கூட்டம் இருக்குமென்று டிடிவி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.


சசிகலாவுக்கு ஒருவர் ஆதரவளித்து போஸ்டர் ஒட்டியதற்கு அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட கட்சியை விட்டு நீக்கினார்கள். சசிகலா தங்கியிருக்கும் ரிசார்ட்டுக்கு கர்நாடகாவின் அதிமுக செயலாளர் போனதற்காக  அவரையும் நீக்கினார்கள். தற்போது, 50 எம்எல்ஏக்கள் ஆதரவுதர இருப்பதாக தகவல் கிளம்பியிருக்கிறது. அதைவிட சிறப்பான செய்தி என்னவென்றால் கொங்கு மண்டல எம்எல்ஏ ஒருவர் 50 லட்சம் ரூபாயில், வெள்ளி வாள் வங்கியிருக்கிறாராம். சசிகலாவிற்கு பரிசளிக்கவும் தயாராகி விட்டாராம்.




சிறையிலிருந்து விடுதலையான பிறகு பெங்களூரு அரசு சிகிச்சை பெற்றுவந்த சசிகலா, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருந்தாலும், தனது வெளிப்படையான அரசியல் நிலைபாட்டை சசிகலா இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், சசிகலா வந்த ஜெயலலிதாவின் காரும், அதில் கட்டப்பட்ட அதிமுக கொடியும் அரசியல் பேசியது. இந்தநிலையில், சசிகலா  அதிமுகவைக் கைப்பற்றுவார் என்பதைக் காட்டுவதாக அவரின் ஆதரவாளர்கள் உறுதிபட தெரிவித்தார்கள்.


ரிசார்ட்டில் ஓய்வெடுத்துக்கொண்டே எடப்பாடிக்கு தொல்லைகொடுக்க ஆரம்பித்துவிட்டார் என்றும் கூறுகிறார்கள். அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவள் நான், என்னிடமே நீ  வேலையைக் காட்டுகிறாரா என்று ஆவேசமாக கூறியிருக்கிறராம்.  ரிசார்ட்டில் இருந்துகொண்டே  எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினாராம். நடந்த பேச்சுவார்த்தையில், வெளிப்பாடாகவே எம்எல்ஏக்கள் தங்கள் பக்கம் என்று டிடிவி.தினகரன் கெத்தாக கூறியிருப்பதாக கூறுகிறார்கள்.




அதிமுகவில் பெரிய தலைக்கட்டுகளான அமைச்சர்கள், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோர் வெளிப்படையாகவே சசிகலாவுக்கு ஆதரவு நல்கி வருகின்றனர். இதில் செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் எந்தப் பக்கம் சாய்வது என்ற யோசனையில் இருப்பதாக தெரிகிறது. எடப்பாடியை விட கட்சியில் சீனியரான செங்கோட்டையன், எடப்பாடிக்கு கீழே  இருக்க சம்பதிப்பாரா என்றால் சந்தேகம் தான். 2016லில் செங்கோட்டையன் தான் அடுத்த முதல்வர் ஆவார் என்று அப்போதே ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அன்று யாரும் எதிர்பார்க்காதவகையில், எடப்பாடியை முதல்வராக  அறிவித்தார் சசிகலா.




தற்போது, செங்கோட்டையனின் நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியும், மன்னிப்பு கடிதம் கொடுத்தால் தினகரனை இணைப்போம் என்று கூறுயிருக்கிறார். இது அதிமுக-சசிகலா இணைப்புக்காக விடப்பட்ட தூதாகவே கருதப்படுகிறது.


எடப்பாடியுடன் மிக நெருக்கத்தில் இருக்கும் கே.பி.முனுசாமியிடமே இந்தக் கருத்து வெளியானது.  அதிமுகவின் ஐவர் குழுவில் கே.பி.முனுசாமியும் ஒருவர் என்பதால், இது அவரின் தனிப்பட்ட கருத்தா அல்லது குழுவில் இருக்கும் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோரால் சேர்ந்து எடுக்கப்பட்ட கூட்டுக் கருத்தா, என்பது தெரியவில்லை.



இப்படி, அமைச்சர்களே இருக்கும் நிலையில், எம்எல்ஏக்களின் நிலைப்பாடுகள் குறித்து சொல்லி தெரியவேண்டியதில்லை. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் திமுக பக்கம் தாவிவிட்டனர். வெற்றிவேல் காலமாகிவிட்டார். மற்ற 15 எம்எல்ஏக்கள் தினகரன் பக்கமே இருக்கிறார்கள். குடியாத்தம் எம்எல்ஏவாக இருந்த ஜெயந்தி பத்மநாபன் வரவேற்பதற்காக ஹெலிஹாப்டரில் மலர் தூவ அனுமதி கேட்டிருப்பதே அதற்கு சாட்சி.




இதுதவிர, தஞ்சை டெல்டா மாவட்டங்களில் எம்எல்ஏக்களை இழுக்க மன்னார்குடிக்காரரான திவாகரன் பேச்சுவார்த்தை நடத்துகிறாராம். அவர்களில் சிலர், சசிகலாவுக்கு ஆதரவு கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்களாம். எடப்பாடியின் சொந்த மண்டலமான கொங்கு மண்டலத்திலேயே சில எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கிறார்களாம். 



தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில் தேனியைச் சேர்ந்த ஜக்கையனை ஓரங்கட்டும் வேலையில் அதிமுக இரட்டைத் தலைமை இறங்கியிருக்கிறது. அதிருப்தியில் இருக்கும் அவர் தன்னுடைய தார்மீக ஆதரவை சசிகலாவுக்கு தெரிவிக்க அதிக வாய்ப்பிருப்பதாகக் தெரிகிறது. இவர் 2017-ஆம் ஆண்டு டிடிவி.தினகரனுக்கு வெளிப்படையாகவே ஆதரவளித்தது கவனித்தக்கது.


மதுரையைப் பொறுத்தவரையில், 7 அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் அமைச்சர்கள். ராஜன் செல்லப்பா, நீதிபதி, பெரியபுள்ளான் ஆகியோருக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சொந்த தொகுதியை விட்டு வேறு தொகுதியில் நிறுத்தப்பட உள்ளதால் தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாகக் தெரிகிறது. இவர்களும் சசிகலாவின் பக்கம் போகலாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.



இந்தநிலையில், கூட்டத்தைக் கூட்டி, சசிகலாவுக்கு ஆதரவாக யாரும் போக வேண்டாம் என்றும், சசிகலா குறித்து யாரும் பேச வேண்டாம் என்றும், வருமானவரித் துறை ரெய்டு வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும், அதற்கு மேலும் காசும்  தருகிறேன் என்னோடு இருங்கள் என்று எடப்பாடி கெஞ்சிக்கொண்டு இருப்பதாக தெரிகிறது.  


இப்படியிருக்க, இன்னொரு பக்கம் படுபயங்கரமான சசிகாவிற்கு வரவேற்பு கொடுக்க தொண்டர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார். அரசு விதித்த தடையை மீறி, ஜெயலலிதா சமாதியில் சபதம் எடுக்கப்போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 



சாதாரண என்ட்ரியாக இருந்தால் தன்னை மதிக்க மாட்டார்கள் என்பதால், பக்க மாஸான என்ட்ரி கொடுக்கவே இத்தனை நாடகங்களும் அரங்கேறுவதாகக் கூறப்படுகிறது. டெல்லி மேலிடமும் எடப்பாடியைக் கைகழுவப் போவதாக தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன. சசிகலா அதிமுகவைக் கைப்பற்றும் நாள் வெகு விரைவில் என்கிறார்கள். காலம்தான் என்ன சொல்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies