பிச்சைக்காரர்களுக்கும் சங்கம் வந்தாச்சு, மாநாடு எல்லாம் இருக்குது என்றும், யார் யார் எந்தெந்த தெருவில் பிச்சை எடுக்க வேண்டும் தீர்மானம் எல்லாம் நிறைவேற்றுவதாக சினிமாவில் கவுண்டமணியின் காமெடி இருக்கும். ஆனால், நிஜத்தில் அது நடக்கிறது.
பிச்சை எடுக்கவேண்டும் என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டால் அவர் விருப்பத்திற்கு எந்த இடத்தில் வேண்டுமானாலும் அவர் பிச்சை கேட்க முடியாது. யாருக்கு எந்த இடம் என்று ஒரு குழு ஒதுக்கிக் கொடுக்கும். ஒதுக்கி கொடுத்த இடத்தில் அவர் பிச்சை கேட்கலாம்.
இவர்களை கண்காணித்து வர ஒரு குழு இருக்கிறது. தினமும் வசூல் வரும் பணத்தில், இடம் ஒதுக்கி தருவோருக்கு மாமூல் கொடுக்கவேண்டும். மாமூல் தரவில்லை என்றால் மறுநாள் அவர் பிச்சை எடுக்கமுடியாது.
எடுக்கிறது பிச்சை..! இதில லொல்லப் பாரு..! எகத்தாளத்த பாரு..! என்று நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கேட்பதுபோல் இங்கே கேட்க முடியாது. அப்படி கேட்ட ஒரு முதியவரையும், அவருடைய மனைவியையும் கடுமையான திட்டு விழுந்திருக்கிறது.
புதுக்கோட்டையில் சாந்தநாத சுவாமிகள், அருள்மிகு வேதநாயகி அம்மாள் சன்னதி கோவில் முன்பு யார் எந்த இடத்தில் அமர்ந்து பிச்சை எடுக்க வேண்டும் என்று இடம் பிரித்து கொடுக்கப்பட்டு, பிச்சை எடுப்பவர்களிடம் தினமும் மாமூல் வசூலித்து வருகிறார் ஒரு பிச்சைக்கார பெண்.
அந்தப்பகுதி கோவில்களில் பிச்சை எடுக்க வேண்டும் என்றால், பிச்சைக்கார தலைவிக்கு மாதமும் ஆயிரம் ரூபாய் மாமூல் கட்ட வேண்டுமாம். வயதான அந்த முதியவருக்கு இந்த பிச்சைக்காரப் பெண்ணிடம் அனுமதி வாங்கிய இடத்தில் அமர்ந்து பிச்சை எடுத்து வருகிறார்கள். அதற்காக இருவரும் மாதம் 2 ஆயிரம் கொடுத்து வருகிறார்கள்.
தினசரி அந்தப் பெண்ணுக்கு மாமூல் மட்டும் 1600 ரூபாய் வசூலாகிறதாம். பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து போலீசாரிடம் புகார் கொடுக்கவும், ஊடகங்களின் உதவியினால் உயரதிகாரிகள் வரைக்கும் புகார் சென்றதால், விஷயம் தெரிந்து தலைமறைவாகி விட்டார் அந்தப் பிச்சைக்கார சங்கத்தின் தலைவி பிச்சைக்காரப் பெண்.




