பேரறிவாளனை விடுதலை செய்துவிட்டேன் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியது குறித்து அற்புதம்மாள் ட்வீட் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் சிறையில் உள்ளனர். இந்த 7பேரை விடுதலை செய்யும் விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பேரறிவாளன் உட்பட 7பேரை விடுதலை செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக அரசு அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கோப்பினை ஆளுநர் வசம் அனுப்பியது. இந்த நடைமுறை நடந்து பல மாதங்கள் ஆகியும் ஆளுநர் இது குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல் கிடப்பில் போட்டு இருந்தார்.
இந்தநிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம், ஆளுநர் ஒரு வார காலத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது. அதைத்தொடர்ந்து 7பேர் விடுதலையில் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், 7பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவரின் முடிவினை அறிய ஒட்டுமொத்த தமிழகமே காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், 7 பேர் விடுதலையில் அதிமுக–பாஜக அரசு கபட நாடகம் ஆடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதையடுத்து, பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நீதியை கொன்று ஒரு நிரபராதியை உயிரோடு புதைக்கும் காலத்தில் கழியும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே. என்னிடம் உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்' என எனது கைகளை பற்றி உறுதியளித்து இன்றுடன் 7 ஆண்டுகள் முடிந்தது. இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவது – இந்த சட்டத்துடனும், அரசியலுடனும்? என்று பதிவிட்டுள்ளார்.