திரைப்பட பாணியில் டிக்டாக் செயலி மூலம் 7 பேரை திருமணம் செய்த பெண். அந்தப்பெண்ணால் பாதிக்கப்பட்ட ஒருவர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடி சேர்ந்தவர் பாலகுரு. கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் உள்ள மகாதேவபுரத்தை சேர்ந்த ரஜபுநிஷா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் பாலகுருவிடம் அறிமுகமாகி பேசி பழகி வந்துள்ளார். காலபோக்கில் இருவருக்கும் இடையில் இருந்த நட்பு, காதலாக மாறி, இருவரும் இரு வீட்டாரின் ஒப்புதலோடு, மணக்குடியில் உள்ள பொரையான் கோவிலில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
பிறகு, இவர்கள் சேந்தங்குடி உள்ள சிவப்பிரியா நகரில் தனியாக வசித்து வந்துள்ளனர். டிரைவர் வேலை பார்க்கும் பாலகுரு அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார்.
இந்தநிலையில், தனிமையில் இருந்த ரஜபு நிஷா சமூகவலைதளங்களுக்குள் நாட்டம் ஏற்பட்டு டிக்டாக், பேஸ்புக் மூலம் பல ஆண்களுடன் பேசிப் பழகி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் பாலகுருவிற்கு ரஜபுநிஷா மீது சந்தேகம் வந்துள்ளது.
மனைவியின் செல்போனை எடுத்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார். மனைவியின் செல்போனில் அதிர்ச்சியடைந்தார். அதில், பல்வேறு ஆண் நண்பர்களுடன் டிக்டாக் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ரஜபுநிஷாவிடம் கணவர் பாலகுரு தொலைபேசியில் கேட்டபோது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது, ரஜபுநிஷா கூறிய வார்த்தைகளை கேட்டு பாலகுரு அதிர்ச்சியடைந்தார். நான் உன்னை மட்டும் திருமணம் செய்யவில்லை. உன்னைப் போல பல ஆண்களை பணத்துக்காக திருமணம் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட பாலகுரு திகைத்துப்போய் நின்றார்.
இதுபற்றி மேலும் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை தான் காதலித்து, சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, எங்கள் வாழ்க்கையில் நீ தலையீட்டால் பார்த்திபனுடன் சேர்ந்து உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியும் உள்ளார். செய்வதறியாது திகைத்துப்போன பாலகுரு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, 70,000 பணமும், ஒரு பவுன் தங்கச் சங்கிலியும் திருடிக்கொண்டு, ரஜபுநிஷா வீட்டை விட்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, பாலகுரு ரஜபுநிஷாவின் அம்மாவிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்தநிலையில், அவரது அம்மா தனது மகள் என்னுடைய ஆலோசனைப்படியே 7 பேரை திருமணம் செய்து உள்ளார் என்று தலைகனமாக கூறியுள்ளார். நீ பேசாம ஒதுங்கிக் கொள். இல்லையென்றால் உன்னை கொலை செய்துவிடுவோம் என அவரது தாயாரும் பாலகுருவை மிரட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பொய்யாக திருமணம் செய்து ஏமாற்றிய ரஜபுநிஷா மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாலகுரு உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், பாலகுரு மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும், பல ஆண்கள் என்னைப்போல் ஏமாற்ற படுவதற்குள் ரஜபுநிஷாவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.



