விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளத்தில் இயங்கி வந்த மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த 20 பேருக்கு சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாட்டு வெடிகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருப்பதால், தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். விதிகளை மீறி ஆலை இயங்கி இருந்தால் 2025 வரை பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பட்டாசு வெடி விபத்து வருத்தம் அளிப்பதாகவும் விபத்தில் காயமடைந்தோர் விரைந்து குணமடைய வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருக்கும் பிரதமர், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் விருதுநகர் தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ 2 லட்சம் கருணைத் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ 50, 000 வழங்கப்படும்.
— PMO India (@PMOIndia) February 12, 2021
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ, களத்தில் அலுவலர்கள் பாடுபட்டு வருகிறார்கள்: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 12, 2021





