Type Here to Get Search Results !

பற்றி எறிந்த யானை: கதறியழுத வனத்துறை ஊழியர்... மனதை உருக்கும் காட்சிகள் #Wild_Elephant #Elephant_On_Fire #மசினகுடி #Elephant #Nilgiris

அதிக காயங்களுடன் நீலகிரி பகுதியில்  சுற்றித்திரிந்த காட்டு யானையை தெப்பக்காடு முகாமிற்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தது நம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. 




தன பசியை போக்க உணவு தேடி தனியார் விடுதி பக்கம் சுற்றித் திரிந்த யானையை கொடூரமாக தாக்கி, எரியும் டயரை தூக்கி எரியும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 



இந்த விவகாரம் தொடர்பாக மாவனஹல்லா பகுதியில் அமைந்துள்ள ரெசார்ட் உரிமையாளர் மகன் ரேமண்ட் மல்லன் மால்கம் (28), பிரசாத் சுகுமாறன் ஆகியோர் நேற்று (22/01/2021) கைது செய்யப்பட்டனர்.




யானையை சிங்காரா பகுதியில் இருந்து தெப்பக்காட்டிற்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தது. அந்தயிடத்தில்  வனத்துறை ஊழியர் ஒருவர் அழும் காட்சி நம் அனைவரையும் மனதை நெகிழ வைத்திருப்பதை மறந்திருக்கமாட்டோம். பொக்காபுரம் என்ற பகுதியில் வாழும் இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் பொல்லன். இவர்  55 வயது மதிக்கத்தக்கவர் , பொல்லனுக்கும் இறந்து போன எஸ்.ஐக்கும் இருந்த பாசப்பிணைப்பை விளக்குகிறது இந்த கட்டுரை.




”டிசம்பர் 2ம் தேதி, 45 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று கொஞ்சம் உடல்நலக்குறைவுடன் சுற்றி வருவதை அறிந்த வனத்துறையினர், அந்த யானையுடன் பழக என்னை அணுகினார்கள். நான் வேட்டைத்தடுப்பு காவலராக முதுமலை புலிகள் காப்பகத்தில் பணியாற்றி வருகின்றேன்.




ஆனால், கடந்தஏழு மாதங்களாக எனக்கு வேலை ஏதும் ஒதுக்கப்படாத காரணத்தால் நான் வீட்டில் இருந்தேன். அந்த நேரம்,  எனக்கு அழைப்பு வரவும் நான் பொக்காபுரம் வனப்பகுதிக்கு சென்று பார்த்தேன். அப்போது தான் அங்கே படுத்திருப்பது எங்களின் எஸ்.ஐ என்று எனக்கு தெரிய வந்தது” என்றார்.




பொக்காபுரம், மசினக்குடி பகுதிகளில் அடிக்கடி சுற்றி வந்த யானையை பலரும் அடையாளம் கண்டுள்ளனர். மிகவும் கம்பீரமாக நடந்து வரும் என்ற காரணத்தால் அதற்கு எஸ்.ஐ. என்று பெயர் வைத்ததாக நம்மிடம் தெரிவிக்கிறார் பெல்லன்.




வேறு யானைகளோடு ஏற்பட்ட மோதல் ஒன்றில் முதுகுப்புறத்தில் பலத்த காயங்களுடன் எஸ்.ஐ. அங்கு படுத்திருந்தான். எனக்கு அது வாழ்வா சாவா தருணம் தான். ஏன்னென்றால்  நம் வீடுகளில்  வீட்டு விலங்குகளை வளர்ப்பது போன்று அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. 




காட்டு விலங்குகள் எப்போது என்ன செய்யும் என்பதை யாராலும் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது. நான் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் சென்று எஸ்.ஐ. என்று அழைக்கவும் நேர்மறையான சமிக்ஞைகளை வழங்கியது எஸ்.ஐ. டிசம்பர் 3ம் தேதியில் இருந்து அந்த யானைக்கு தேவையான மருந்துகள் அனைத்தையும் நான் தான் பழங்களில் வைத்து அதற்கு தருவேன். வேறயாருமே அதன் அருகில் கூட செல்லாத நிலையில், நான் எஸ்.ஐ.ஐ ஒரு குழந்தை போல கவனித்துக் கொண்டேன்”




எஸ்.ஐ.க்கு  ஒரு வாரத்தில் நல்ல முன்னேற்றம் தெரியவும், என்னுடன் இன்னும் கொஞ்சம் நெருக்கம் காட்ட துவங்கினான் எஸ்.ஐ. அந்த யானை செல்லும் வழியெல்லாம், நானும் உடன் நடந்தேன். வனத்துக்குள் செல்லும் யானை மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் செல்வதை தடுக்க, நானும் என்னுடன் மேலும் 4 வனத்துறையினரும் நியமிக்கப்பட்டிருந்தோம். இரவு நேரத்தில் யானையை கண்காணிக்க மேலும் நான்கு நபர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.


”28ம் தேதி அன்று யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, அதற்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் செய்து நாங்கள் மீண்டும் வனத்திற்குள் அனுப்பினோம். உணவு தேடிக் கொண்டு சுற்றித் திருந்த யானை அந்தப்பகுதியில் இருக்கும் மாவனஹல்லாவில் இருந்த பிரட் அண்ட் பிரேக்ஃபாஸ்ட் ரெசாட்டிற்கு சென்றுள்ளது. அங்கு உள்ள காரை தாக்கியதாக கூறப்படுகிறது. 




ஆனால், ரெசாட்டில் இருந்த கொடூர நபர்கள் மண்ணெண்ணை நிரப்பட்ட டையரை கொளுத்தி யானையின் மீது வீசியுள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும் போதெல்லாம் மனம் நிலைக்கொள்ளவில்லை. என்னுடைய  தாத்தா காலத்தியிருந்தே காடுகளையும், வனவிலங்குகளையும் நான் பார்த்து வருகிறேன். இது போன்ற ஈவிரக்கமற்ற செயலை நான் ஒரு போதும் பார்த்ததே” இல்லை என்று கண்ணீர் வடிக்கிறார் பெல்லன்.



மீண்டும் சிங்காரா வனப்பகுதியில் சில காயங்களுடன் எஸ்.ஐ. சுற்றித் திரிவதாக செய்தி வந்தவுடன் நான் சென்று பார்த்தேன். அவனுக்கு ஏற்பட்ட காயம் ஆரம்பத்தில் அவ்வளவு வெளிப்படையாக தெரியவில்லை. அவனுடைய காதில் இருந்து ரத்தம் சொட்டுவதை பார்த்ததும் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தேன். 




இதனால், யானைக்கு சிகிச்சையளிக்க 2 மருத்துவக் குழுவினர், வாசீம், கிரி, விஜய், மற்றும் கிருஷ்ணா கும்கி யானைகள் உதவியுடன் பிடித்தனர். ஆனால் என்ன, மசினக்குடியை தாண்டி ஒரு கி.மீ கூட சென்றிருக்கமாட்டோம். எஸ்.ஐ. இறந்துவிட்டான். என்னுடைய மகனைப் போல் நான் அவனை பார்த்துக் கொண்டேன். அதனால் தான் என்னால் என்னுடைய அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.




எஸ்.ஐ. இறந்ததும், நான் மயங்கி விழவும், என்னை என்னுடைய வீட்டில் விட்டு சென்றனர் வனத்துறையினர். மூன்று நாட்கள் எனக்கு ஓய்வு தரப்பட்டது. என்னுடைய வாழ்நாளில் இனிமேல் எஸ்.ஐ. போன்ற ஒரு யானையை பார்க்கவே முடியாது. 45 வருடங்களாக இதே பகுதியில் தான் சுற்றி வந்தான். ஒருவரையும் துரத்தியதில்லை. தாக்கியதில்லை. காயப்படுத்தியது இல்லை என்கிறார் அவர்.




மாவனஹல்லா பகுதியில் வாழும் மக்களிடம் கேட்ட போது, இந்த யானை அடிக்கடி இந்த பகுதிக்கு வருவது வழக்கம் தான். யானைக்கு முறையாக உணவு வழங்கப்பட்டிருந்தால் அந்த யானை ஏன் இங்கு வரப்போகிறது என்று வருத்தம் தெரிவித்தனர். 




பல  முறைகள்  யானை இப்பகுதிக்கு வரும்போது, இதே ரெசார்ட் உரிமையாளர்கள் தான், வனத்துறையினருக்கு தகவல் தந்து அதனை காட்டுக்குள் விரட்டுவார்கள். வனத்துறையினரின் அலட்சியம்தான், காட்டு விலங்குகளுக்கு இது போன்ற ஒரு துயர சம்பவம் நிகழந்திருக்கிறது என்கின்றனர். 



இந்நிலையில், மாவனஹல்லா பகுதியில் செயல்பட்டு வந்த ரெசாட்கள், மூடப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியாளர் இன்னசெண்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies