சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. நுரையீரல் தொற்றும், நிம்மோனியா காய்ச்சலும் உள்ளது.
இதனால், 27ஆம் தேதி அவர் விடுதலை ஆவது குறித்த சந்தேகம் எழுந்த நிலையில், திட்டமிட்டபடி 27ஆம் தேத சசிகலா விடுதலை ஆவார் எனவும், அதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் அசோகன் தெரிவித்துள்ளார்.
வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக இருந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தற்போது பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்றைய சிடி ஸ்கேன் ரிப்போர்ட் படி சசிக்கு லேசான கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜனவரி 21 அன்று இரவு உடல்நிலை நன்றாக இருந்தது. இன்று காலை மருத்துவமனை வட்டார தகவலின்படி; நுரையீரல் அதிக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிமோனியா காய்ச்சல் இருப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் இல்லை.
மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு கூறப்படுகிறது. அவருக்கு சுவாச சிரமம் ஏற்படுவதால் தொடர்ந்து ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது.
சசிகலா உறவினர்கள் பலர் பெங்களூருவில் இருந்து அவரை கவனித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, சசிகலாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவர் ஜெயிலில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், அவருக்கு துணையாக இருந்த உறவினர்கள் மற்றும் சில நபர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ சுகாதார ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா சோதனை நடத்தப்படவுள்ளது. சிறையில் இருக்கும் இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
அமமுக பொதுச்செயலர் தினகரன் , சசிகலாவை சந்தித்ததால் அவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது, சூளகிரியில் உள்ள அவர் பெங்களூரு வரவுள்ளார். இதன்பிறகு இது குறித்து உறுதி செய்யப்படும். இவ்வாறு மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், சசிகலாவின் வழக்கறிஞர் அசோகன் கூறுகையில், ‛திட்டமிட்டபடி சசிகலா 27ஆம் தேதி விடுதலை ஆவார். அதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை. 27ஆம் தேதிக்கு பிறகு சசிகலாவை ஒருநாள் கூட சிறையில் வைத்திருக்க எவ்வித அதிகாரமும் இல்லை,' எனக் கூறினார்.
சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறைத்துறை அனுமதி அளிக்கும்பட்சத்தில் சசிகலா பெங்களூரில் உள்ள மனிபால் மருத்துவமனைக்கு மாற்ற வாய்ப்பு உள்ளது.