சசிகலாவுக்கு இரு நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. ஜனவரி19-ஆம் தேதி அவருக்கு காய்ச்சலுடன் மூச்சுத்திணறலும் அதிகமானதால், உயர் சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சசிகலாவை, விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அங்கு சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் சசிகலாவுக்கு கொரோன தொற்று இருப்பது, அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில், திட்டமிட்டப்படி வருகிற 27-ந் தேதி சசிகலா விடுதலை ஆவாரா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக, வி.கே.சசிகலாவிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.கணேசன் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.
வரும் 27ஆம் தேதி சின்னம்மா விடுதலையாகி தமிழகம் வரவுள்ள நிலையில் அவரது உடல் நிலையில் சிறைத்துறை கவனம் செலுத்தாது வேதனை அளிக்கிறது. கடந்த 7 நாட்கள் அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருந்தும் அதனை அவரது உறவினர்கள், வழக்கறிஞர்களிடம் தெரிவிக்காதது ஏன்...?
சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கிறார் என்று கூறி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க காரணம் என்ன...? என்ற கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
ஒட்டுமொத்த தமிழகமும் அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வெளிப்படைத் தன்மை வேண்டும். தமிழக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது மருத்துவ அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பூரண நலம் பெற்று சின்னம்மா தமிழகம் வரவேண்டும் என்று இறைவனை வேண்டுக் கொள்கிறேன். சின்னம்மாவை வரவேற்க தமிழக மக்களும், எங்கள் கட்சி தொண்டர்களும் காத்திருக்கிறோம் என்று கூறினார்.